பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

ஆவர் எனலாம். தில்லை மூவாயிரவர், அஷ்டஸகஸ்ரம், (இரட்டபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரம்) என்று எண்ணோடு பொருத்திக் குறித்தாற்போலக் கடிகையாரும் கடிகை ஏழாயிரவர் எனப்பெற்றனர். ஆகையால் காஞ்சிக் கடிகையில் ஏறத்தாழ ஏழாயிரம் பேர் இருந்தனர்போலும். (டாக்டர் ஸி. மீனாட்சி அவர்கள் திருவல்லம் கல்லெழுத்தில் குறிக்கப்பெற்றவர் வல்லத்துக் கடிகையார் என்று கருதுவர்.)

கடிகையின் செல்வ நிலைமை

பல்லவ அரசர்களது மேற்பார்வையிலும் பாதுகாப்பிலும் காஞ்சிக் கடிகை இருந்தது. ஆகவே செல்வத்திற்குக் குறையே இருந்திருக்க முடியாது. கடிகையார்க்கு என்று நிலபுலங்கள் இருந்திருத்தலும் கூடும்; இது ஒரு கல்லெழுத்தினின்று (285 of 1921; 119 of S. I. I., Vol. xii)தெரிய வருகிறது. இது கோப்பெருஞ்சிங்கனது 5-ஆம் ஆண்டு (கி.பி. 1240-க்குரிய) ஆத்தூர்க் கல்வெட்டு. இதில் "கடிகை யார் இறையிலி நிலம் மூன்றேகாலும்’ என்றுள்ளது. மூன்றேகால் என்பது மூன்றேகால் வேலி நிலத்தைக் குறிக்கும் இறையிலி நிலம் என்றமையின், இறையிலி ஆக்கியது இதற்கு முன்னரே என்று அறியலாம். 13-ஆம் நூற்ருண்டில் கடிகையார் இல்லாதவராயினர். எனினும் இறையிலி நிலம் அவர் பெயராலேயே அமைந்திருந்தது போலும். இதனுல் காஞ்சிக் கடிகையார்க்குச் சொந்தமான நிலங்களும் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி.

காஞ்சியில் எங்கு இருந்தது

காஞ்சிபுரத்தில் இக்கடிகை எவ்விடத்தில் அமைந்து இருந்தது என்பதும் ஒரு நல்ல கேள்வி. வேதாகமங்களைப் படிப்பிக்கும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் பண்டைக் காலத்தில் கோயில்களில் அமைந்திருந்தன என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/15&oldid=970848" இலிருந்து மீள்விக்கப்பட்டது