பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


மனுசரிதக் கல்லெழுத்து

இக்கல்லெழுத்து திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் இரண்டாம் பிராகாரம் வடபுறச் சுவரில் உள்ளது. மனுவேந்தன் மந்திரியான உபயகுலாமலன் வம்சத்தனான பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மகாபலிவாணராயனுக்கு 120 குழி மனையும் மாளிகையும் பாலையூரில் தரப்பெற்றதை இக் கல்லெழுத்து விவரிக்கிறது. இது கி. பி. 1118 முதல் 1113 வரை அரசாண்ட விக்கிரமசோழரின் 5-வது ஆட்சியாண்டில் அளிக்கப்பெற்ற சாசனம் ஆகும்.

இச் சாஸனத்தினின்று அறிவன

மனு திருவாரூரில் இருந்து அரசு புரிந்தவர் என்றும், மனுவின் மந்திரியின் பெயர் இங்கனாட்டுப் பாலையூடையான் உபயகுலாமலன் என்றும், மனுவின் மகன் பெயர் பிரியவிருத்தன் என்றும், மனுவின் மந்திரி வம்சத்தவன் - விக்கிரம சோழன் காலத்தில் இருந்தவன் - பாலையூர் உடையார் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மகாபலிவாணராயர் என்பவர் ஆவர் என்றும் இக்கல்லெழுத்துப் பகுதியினின்று அறிகிறோம்.

கன்றிழந்த பசுவின் சிற்பம்

திருவாரூர்த் திருக்கோயிலில் இவ் வரலாற்றை நினைவுப்படுத்தும் சிற்பம் இருக்கின்றது. ஒரு கற்றேர், பசு, கன்று; கன்றை இழந்த பசு கீழ் நோக்கிய பார்வையுடையது; அப் பார்வை கவலைக்குறியுடையது. இச் சிற்பமும் இச்சரிதத்தை நினைவுறுத்தும் சாதனங்களில் ஒன்று.

முடிப்புரை

இங்ஙனம் மகாவம்சத்திலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் நூல்களிலும், சோழர் கல்லெழுத்திலும், திருவாரூர்த் திருக்கோயிற் சிற்பத்திலும், பெரிய புராணத்திலும் விளக்கம் பெறும் மனுநீதிச் சோழர் வரலாற்றை நினைவு கூர்ந்து மக்கள் பசுக்களைப் போற்றி ஆபயன் வளர்ப்பாராகுக.