பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. இசை ஞானியார்

முன்னுரை

சுந்தரரைத் திருமகனாராகப் பெற்றெடுத்த பெருமையுடையவர் இசைஞானியார். இவரைப்பற்றிய செய்திகளாகத் தடுத்தாட்கொண்ட புராணம், சுந்தரர் தேவாரம், திருத்தொண்டர் திருவந்தாதி, திருவாரூர்க் கல்வெட்டு ஆகியவற்றினின்று அறிவனவற்றை இங்குக் காண்போம்.

சடையனார்

இவர் சுந்தரருடைய தந்தையாவர். இவரே இசை ஞானியாரின் கணவனார் ஆவர். இவ்விருவரும் தவம் செய்து பெற்றெடுத்தவரே சுந்தரர். தடுத்தாட்கொண்ட புராணத்தில், "ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசைஞானியார்", என்று பின்வரும் பாடலில் இசைஞானியார் கூறப்பெற்றுள்ளார்:

"மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர்குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்(கு)
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானியார்பால்

தீதகன் றுலகம் உய்யத் திருவவதாரஞ் செய்தார்."

திருத்தொண்டத் தொகையில்

திருவாரூரில் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியது யாவரும் அறிந்ததே. அதுவே பெரிய புராணத்துக்கு அடிப்படையாயமைந்த நூலாகும். அத்திருத் தொண்டத் தொகையுள் சுந்தரர் தன்னை "இசைஞானி காதலன் திரு நாவலூர்க்கோன்" என்று குறித்துக் கொண்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/74&oldid=1388537" இலிருந்து மீள்விக்கப்பட்டது