1. காஞ்சிக் கடிகை
காஞ்சிபுரத்தின் பழமையும் பெருமையும்
இந்தியப் புண்ணியத் தலங்கள் ஏழனுள் ஒன்றாகக் கருதப்பெறுவது காஞ்சி, அசோகன் காஞ்சியில் ஸ்தூபிகளைக் கட்டினான். கி. மு. 150-ல் இருந்த பதஞ்சலி முனிவர் தமது மகாபாஷ்யத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். கி. மு. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் என்னும் சோழன் வடநாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றபொழுது வேடன் ஒருவனால் காஞ்சியின் வளப்பத்தை அறிந்து, மதில்களை எழுப்பி, வேளாளர்களைக் குடியிருத்தினான். தொண்டை நன்னாட்டில் யாவரும் ஏத்தும் நிலையில் விளங்குவது காஞ்சி மாநகரம். சங்க காலத்தில் இது சிறந்த நகரமாகத் திகழ்ந்தது பெருபாணாற்றுப்படையில் இது சிறப்பிக்கப்பெறுகிறது; அந்நாளில் தொண்டைமான் இளந்திரையன் என்பான் ஆண்டதாகத் தெரிகிறது. மணிமேகலைக் காலத்தில் காஞ்சியில் ஆண்டவன் இளங்கிள்ளி என்பவன். இவன் புத்தர் கோயில் ஒன்று கட்டினான். வஞ்சி நகரத்தில் இருந்த மாசாத்துவான் கூறியவண்ணம் மணிமேகலை காஞ்சிமாநகரத்துக்குச்சென்று, அங்குப் புத்தபீடிகை அமைத்தாள்; அமுதசுரபியைக் கொண்டு எல்லா உயிர்களின் பசிப் பிணியையும் போக்கினாள்; அறவண அடிகளிடம் தவத் திறம் பூண்டு தருமம் கேட்டாள்.
பல்லவர் கோநகர்
இத்தகைய பழம்பெருமை வாய்ந்த காஞ்சிபுரம், சிம்மவிஷ்ணு என்ற பல்லவப் பேரரசன் காலம் முதல் (கி.பி.575) பல்லவர்களுடைய கோநகரமாக அமைந்திருந்தது. இவனுக்கு முன்னும் சில சில சமயங்களில் பல்லவர் கையில் இருந்தது; கைம்மாறியதும் உண்டு. காகுத்தவர்மன் என்னும்