பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 ஆரணிய காண்ட ஆய்வு

வரிசிலையோன் =இலக்குவன். இயம்பாமுன் = அவன் சொல்லி முடிப்பதற்குள், சேற்ற வளை = சேற்றில் உள்ள பெண் சங்கு. நாம் பயன்படுத்தும் வெண்சங்கு ஒர் உயிர்ப் பொருளின் தசை நீங்கிய உடலாகும்; சங்கு என்பது ஊர்ந்து செல்லும் ஒருவகை உயிரி.

மாற்றவள் = சக களத்தி. ஒரு பெண்ணுக்கு அவள் கணவனின் மற்றொரு மனைவிக்குச் சககளத்தி என்பது பெயர்; இது வடமொழிச் சொல்லாகும். இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் ஒத்தாள், ஒர் படியாள் என்பன. ஒத்தாள் - ஒர்படியாள் என்று உலக வழக்கில் கூறுவது உண்டு. சக என்பது ஒத்தநிலையைக் குறிக்கிறது. ஒர்படி என்றால் ஒத்த நிலை. எனவே ஒத்த நிலையில் உள்ளவள். இவர்கட்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு நிகழ்வது உண்டு - ஆதலால் மாற்றாள் - மற்றவள் எனப்படுவர். மாற்றாள் என்பதற்கு வேறு உணர்வு உடையவள் எனப் பொருள் கொள்ளாமல், மற்றொருத்தி, அதாவது, ஒருத்திக்கு மாற்றாக - பதிலாக உள்ளவள் எனவும் பொருள் கொள்ளலாமே.

ஒத்து - ஒற்றுமையாய் இருக்க வேண்டியவர்கள் ஒருத்தியை ஒருத்தி கொன்றுவிட முயலும் அளவுக்கு வேறு படுவதும் உண்டு. உலகியலில் ஒருத்தி உறவு ஒன்றும் இல்லாத மற்றொருத்தியோடு வாதிடும்போது, அடி என் மாமியாரே என்றோ - அடி என் நாத்தனாரே என்றோ - அடி என் ஓரகத்தியே என்றோ திட்டுவது இல்லை; மாறாக, 'அடி என் சக்களத்தி (சககளத்தி) என்று திட்டுவதைக் காணலாம். இதிலிருந்து, சககளத்திப் போராட்டம் எத்தகையது என்பது புரியும். கோசலையின் சககளத்தியாய்க் கைகேயி இருந்து செய்த சூழ்ச்சிதான் தெரியுமே!