பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 0 ஆரணிய காண்ட ஆய்வு

'கலைமான் முதலாயின கண்ட எலாம்

அலைமானுறும் ஆசையின் வந்தனவால் நிலைமாமன் வஞ்சனை நேயம் இலா விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே” (215)

அலைமானுறும் ஆசை = அலை மோதும் மிக்க காமம். மனத்தின் வஞ்சனை நிலையாயுள்ளது; ஆனால், விலை மாதரிடம் உண்மையின் அன்பு இல்லை. இவர்களை அன்பின் விழையார் (911) என்றுள்ளார் வள்ளுவர்.

பாடலின் இறுதியில் உள்ள விழுந்து என்னும் சொல் மிகவும் நயமானது. ‘எல்லாரும் அதிலே போய் விழுகிறார்கள் - எல்லாரும் அங்கே போய் விழுகிறார்கள்’ என உலக வழக்கில், சில செய்திகள் தொடர்பாகச் சிலரைப் பற்றிக் கூறுவதுண்டு.

ஆசை காரணமாகப் போய் விழறானுவ என்பதும் உண்டு. இழப்பு (நஷ்டம்) எய்துதல் என்னும் பொருளிலும் இது பயன்படுத்தப்படுவதுண்டு. மணமகளைப் பற்றியும் குடும்பத்தாரைப் பற்றியும் சரியாகத் தெரியாமல் - விசாரிக் காமல் - திடுதிப்பென்று போய் ஒரு கிணற்றில் விழுந்து விட்டோம் - என்னும் வழக்கு ஈண்டு எண்ணத் தக்கது.

இவை எல்லாவற்றையும் விட, விலைமாதராகிய படுகுழியில் விழுந்து விட்டதாகக் கூறுவது பொருத்தமான வழக்காறாகும். இதைத்தான்,

"வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாய்

பூரியர்கள் ஆழும் அளறு' (919)

என்றார் வள்ளுவர். ஆழும் அளறு என்பது எண்ணத் தக்கது. விழுவதைவிட, உள்ளே ஆழ்ந்து போதல் கடுமையான தன்றோ?