பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


:பதிப்புரை

அழியா வரம் பெற்ற அருமைத் தாய்மொழிக்குக் கம்பர் பெருமான் வழங்கிய ஒப்பற்ற காப்பிய அணி கம்ப இராமாயணம். வடமொழியில் இராம காதையை வால்மீகி முனிவர் படைத்தார். அதை அடிப்படையாகக் கொண்டு கம்பர் தமது இராம காதையைப் படைத்திருப்பினும், மூலத்திலிருந்து கம்பர் பல இடங்களில் மாற்றங்கள் செய்துள்ளார்.

ஆறு காண்டங்களாகத் தமது காப்பியத்தைச் சிறப்புமிக அமைத்துள்ள கம்பர் பெருமானின் மொழிப் புலமை, கற்பனைத்திறன், சொல்லாட்சி, வடிவமைப்பு, புராணஅறிவு, பொதுநோக்கு, கதை அமைக்கும் திறன் போன்றவற்றை உணர்ந்தால் சுவைக்காத தமிழர் இருக்கமாட்டார்.

ஆறு காண்டங்களுள் ஒன்றான ஆரணிய காண்டம் என்னும் பகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களோடு, ஏனைய தமிழ் இலக்கிய நூல்களில் உள்ள பொருத்தமான சில செய்யுட்களையும் உலகியல் நடைமுறைகள் சில வற்றையும் ஒப்புமைப்படுத்தி, முனைவர் திரு. சுந்தர சண்முகனார் ஆரணிய காண்ட ஆய்வு என்னும் இந்நூலைப் படைத்துள்ளார். கம்பரது கவித்திறத்தை உரைத்துப் பார்த்து, உண்மையை உணர வைத்து உச்சி முகர்ந்து பாராட்ட வைத்துள்ளார் ஆசிரியர். நம் குழந்தையின் அருமை பெருமையை நம்மிடமே எடுத்துச் சொல்லி நம்மையே வியப்புக்கு உள்ளாக்குகிற உத்தி, இதில் பாராட்டு முகமாய்க் கையாளப்பட்டுள்ளது.

இந்நூலை வெளியிட உதவிய புதுவைக் கம்பன் கழகத் தாருக்கும் அதன் செயலாளரான கம்பவாணர் திரு அ. அருணகிரி அவர்கட்கும் நூலாசிரியர் அவர்கட்கும் அழகுற அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தினருக்கும் உளமார்ந்த நன்றி உரியது.

அன்புடன்

வானதி ஏ. திருநாவுக்கரசு