பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் ☐ 69


வேண்டினான். ஆனால் இராமன் இன்னும் தென் திசை நோக்கிச் செல்ல விரும்புகிறேன் என்றான்.

பின்னர் அகத்தியன், அம்பறாத் தூணியோடு ஓர் உயர்ந்த வில்லும், வாளும், சிவன் முப்புரம் எரிக்கக் கொண்டு போன அம்பும் ஆகியவற்றை இராமனுக்கு அளித்தான்; பின், சிறிது தொலைவு செல்லின் பஞ்சவடி என்னும் இடம் உள்ளது - அங்குச் சென்று தங்கலாம் என அந்த இடத்தின் வளத்தைக் கூறலானான்:

உள - உள- உள-உள

அங்கே உண்ண வாழைக் கனியும் செந் நெல்லும் உண்டு; சூடிக் கொள்ள மலர் வளம் உண்டு; நீராடக் காவிரி போன்ற ஆறு உண்டு; சீதை அன்போடு விளையாடப் பெரு நாரைகளும் அன்னங்களும் உண்டு என்று விளக்கினான்:

“கன்னி இள வாழை கனி ஈவக்கதிர் வாலின்
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும்உள போதா
அன்னம் உள இவளொடு அன்பின் விளையாட
(58)

கன்னி, இள - இரண்டும் ஒரே பொருளன - இந்த அமைப்பு ஒரு பொருள் பன் மொழி எனப்படும். வாலின் செந்நெல் = நெல்லுக்கு ஒரு சிறிது நீண்ட வால் போன்ற பகுதி உண்டு. பொன்னி = காவிரி, போதா = பெரு நாரை.

போதாவும் அன்னமும் துன்பம் தராத இனிய பறவைகள் ஆதலின் ‘அன்பின் விளையாட’ எனப்பட்டது.

காவிரி தெய்வப் பொன்னி எனப்பட்டது. காவிரியையும் காவிரி நாட்டையும் கம்பரால் மறக்க முடியவில்லை. முன்பு, கோசலை நாட்டைக் ‘காவிரி நாடு அன்ன கழனி நாடு’