பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பாடல் வடிவமும் தரப்பட்டுப் பின்பு உரை வரையப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பையே யான் பின்பற்றியுள்ளேன்.

மலரை இதழ் இதழாகப் பிய்த்தும் கசக்கியும் நுகர்வது பொருந்தாது என்பது அடியேனும் அறிந்த செய்தியே. இருப்பினும், எளிய நடையில் புதுக்கவிதைகள் புறப்பட்டு விட்டதாலும், பிரித்து அமைக்காத மரபுப் பாடல்கள் பலருக்கு மயக்கம் தருவதாலும், யான் சில இடங்களில் பிரிக்காமலும், கடினமான இடங்களில் பிரித்தும் பாடல்களை அமைத்துள்ளேன். இந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்புக்கு யான் நன்றிக்கடன் உடையேன்.

இலக்கணக் குறிப்புகள்

இடையிடையே இலக்கணக் குறிப்புகள் தந்தால் பாடலின் சுவை குறைந்து விடும் என்பது ஒரு கருத்து. பாடலைப் புரிந்து கொண்டால்தானே சுவைக்க முடியும். எனவே, பாடலைப் புரிந்து கொள்ளவும் சுவைக்கவும் செய்ய உதவும் ஒரு சில இலக்கணக் குறிப்புகளையே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தந்துள்ளேன்.

காண்டங்கள் கம்ப ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு பிரிவுகள் உள்ளன. இந்த ஆறினுள் இங்கே எடுத்துக்கொண்டிருப்பது ஆரணிய காண்டம் ஆகும்.

பாலகாண்டம் பருவத்தால் பெற்ற பெயர். அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகிய மூன்றும் செயல் நிகழ்ந்த இடத்தால் பெற்ற பெயர்களாகும். சுந்தர காண்டம் செயல் நிகழ்த்தியவரின் பெயரால் பெற்ற பெயராகும். யுத்த காண்டம் செயலால் பெற்ற பெயராகும்.