பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

99


தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சிகளே நம் வரலாற்றிலும் இலக்கியங்களிலும், ஆரிய ‘இதிகாசங்'களிலும், ‘புராணங்'களிலும் பெரும்பகுதியாகும். நாம் தலையெடுத்ததும், தலைகவிழ்ந்ததும் ஆரிய நூல்களில் தேவ –அசுரப் போர்களாக எழுதிவைக்கப்பட்டிருக்கும்; தமிழ் இலக்கியங்களில் தமிழ – வடவர் எழுச்சி வீழ்ச்சிகளாகப் பாடி வைக்கப்பட்டிருக்கும். ஆரிய நூல்களில் காணப்பெறும் முனிவரும், அரசரும், ஆடவர் பெண்டிரும் ஆரிய மதர்ப்பு மிக்கவர்களாகத் தோன்றுகின்ற அதேவேளையில், தமிழ் இலக்கியங்களில் உள்ள அரசரும், துறவியரும், ஆடவர் பெண்டிரும் ஆரியர்க்கு அடிமைகளாகவே நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு படைக்கப் பெற்றுள்ளனர். காரணம் கடைக் கழகக் காலத்திலேயே புலவர்களும், அரசர்களும் தொண்ணூறு விழுக்காடு ஆரிய அடிவருடிகளாகவே இருந்துள்ளனர். அவர்கள் அழுத்தி வைக்கப்பெற்ற ஆரியச் சேற்றிலிருந்து தமிழர்களால் இன்னும் தங்கள் இனத்தையும் மொழியையும் மீட்டுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு ஆழத்தில் இவ்வினம் புதைக்கப்படுமாறு துணை நின்றனர் என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இன்றுள்ள தமிழர் கையாள்கின்ற சமயங்கள், சாதிகள், பழக்க வழக்கங்களுளம் பெரும்பாலன ஆரியருடையனவே! பிற்காலச் சமயநூல்களிலன்றிக் கழகக் காலத்துள்ள நூல்களில், தமிழன் சமயத்தளைகளுள் இவ்வளவு கட்டுண்டிருந்தான் என்பதற்கு எவரேனும் ஒரு சான்று காட்ட முடியுமா ? இறைக்கொள்கை இருந்தது; முழு முதல் மெய்ப்பொருளைத் தமிழன் என்றும் மறுக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படையில் இற்றைத் தமிழன் போல் பல்லாயிரக்கணக்கான சமயப் பூசல்களை உண்டுபண்ணிக் கொண்டிருந்தான் என்று எவரேனும் கூறுதல் முடியுமா? இவற்றை ஈண்டு எதற்குக் குறிப்பிட நேர்ந்தது என்றால், தமிழன் எத்துறையில் விழிப்பற்றிருந்தானோ, ஆரியன் அத்துறையில் விழிப்போடிருந்தான்; தமிழன் எங்கெங்கு துரங்கத் தலைப்பட்டானோ, அங்கங்கெல்லாம் ஆரியன் விழித்துக் கொண்டிருந்தான். தமிழன் எவ்வெவரைப் பகைவர்களாகக் கருதினானோ அவரவர்களை யெல்லாம் ஆரியன் நண்பர்களாகக் கருதி வந்துள்ளான். தமிழன் எதில் எதிலெல்லாம் தன் பகுத்தறிவையும் தன்மானவுணர்வையும் இழந்துவந்தானோ அதிலதிலெல்லாம் ஆரியன் தன் அறிவையும், மானவுணர்வையும் செலுத்தத் தொடங்கினான். இந்த நிலை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளது, இனியும் தொடர விருக்கின்றது. தமிழினம் இப்படியே தூங்கிக் கொண்டும், ஏங்கிக் கொண்டும்,