பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

திரு. திருவாட்டி என்ற சொற்கள்தாம் இனிப் பயிலப்பெறுதல் வேண்டும் என்று அரசு கட்டளையிட்டிருந்தும், சென்னைத் தினமணிப் பார்ப்பனர் ‘ஸ்ரீ’ என்ற சொல்லை இன்னும் விடாப்பிடியாக எழுதி வருவதுபோன்ற ஆரியப் பிடிகளைத் தளர்த்திக், குமுகாய, மொழி, நாட்டு அமைப்பில் அவர்கள் தம் இன, சாதிப் பூசல்களை அறவே கையை விட்டுத் தமிழர்களுடன் ஒரு பொதுமை உணர்வைக் கைக்கொண்டு வாழ்ந்தாலொழிய, இனித் தமிழகத்தில் அவர்கள் அமைதியையே காணமுடியாத ஒருநிலை வளர்ந்துவிடும் என்று எச்சரிக்கின்றோம். மதுரையினின்று வெளிவரும் தினமணி மட்டும் மதுரைத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் தலையீட்டின்பின் ‘ஸ்ரீ’யைத் தவிர்த்துத் ‘திரு’வையே வாழவைத்துள்ளது. சென்னைக் கல்லூரி மாணவர்கள் இது பற்றி வாளாவிருப்பதால் ஒருவேளை சென்னைத் தினமணி ‘ஸ்ரீ’யை சிரிக்க வைத்திருக்கலாம்.

இனி, தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ‘தெய்வப்பட நீக்கச் சுற்றறிக்கை’ ஆரியர், ஆரியத்தமிழர் ஆகிய இரண்டு திறத்தாரிடமும் எழுச்சியை ஊட்டியுள்ளது. சமய வெறியில் ஆரியத் தமிழரும் ஆரியரும் ஒரே ஆற்றில் ஊற்றுப் பறித்தவரே ஆவர். இவ்வொரு வழி கொண்டே ஆரிய மாயையினின்று தமிழர் இன்னும் விடுபட முடியவில்லை. இறைக்கொள்கையை வீடு, வாசல், முற்றம், தெரு, காய்கறிக்கடை, அலுவலகம், எல்லா இடங்களிலும் இழுத்துக் கொண்டு திரிந்தால்தான் வீடுபேறு எளிதில் கிடைக்குமோ? மலந் தின்னும் பன்றி, சேற்றில் புரளும் எருமை, மூட்டை சுமக்கும் கழுதை, பிணந்தின்னும் கழுகு, உடலைக்கொத்தும் புழு முதலிய எல்லாவகை உயிர்களிடையிலும் வேற்றுமையிலாது விளங்கும். இறைப்பேரருள் அலுவலகங்களில் படப்படைப்பு செய்யாது போனால் அவனை வீட்டுக்கினின்று தலைகுப்புறத் தள்ளிவிட்டு விடுமோ ! எல்லாம் வல்ல மெய்ப்பொருளன் உண்மை உணராத போலிக் கடவுள் கொள்கையரே இத்தகைய குமுகாயத் திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்புக் காட்டுவர். உண்மைத்தமிழர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழில் எப்படி வடமொழிக் கலப்பு ஏற்பட்டு எவ்வாறு மெய்ம்மைத் தமிழையும் அதன் எழிலையும் தமிழன் காணமுடியாது போயிற்றோ, தமிழ் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் எப்படி ஆரியக் கலப்பேற்பட்டு மெய்ம்மைத் தமிழ்ப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அவற்றின் சிறப்புகளையும் தமிழன் அறியமுடியாமற் போயிற்றோ, அவ்வாறே தமிழரின் இறைக்கொள்கை – கடவுட் கொள்கையிலும் ஆரியக் கொள்கை