பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

103


கலப்புற்றுச் சமய ஆரவாரங்களை உண்டாக்கிவிட்டது என்பது மறுக்கவியலாத உண்மை. காலமும் இடமும் வாய்க்கும் பொழுது இவை பற்றியும் அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசுவோம்.

ஈண்டு இவ்வுண்மைகளால் புலப்படுத்த வந்தவை இரண்டு. “தமிழ்த்தாய்”க் கட்டுரை எதிர்ப்பு ஆரியப் பகைவர்களை மட்டும் கொதித்தெழச் செய்வானேன்? “தமிழக அரசின் தெய்வப்பட நீக்கக் கொள்கை” ஆரியப் பகைவர்களையும், வீடணத்தமிழரையும் கொதித்தெழச் செய்வானேன்? இவ்விரண்டு கேள்விகளுக்கான விடைகளில் தாம் தமிழனின் உண்மையான தன் மானம் புதைக்கப்பட்டுக் கிடக்கின்றது. அவன் வரலாறு மறைந்து கிடக்கின்றது. உண்மையான தமிழக மறுமலர்ச்சிக்குப் பாடுபடும் தமிழன் ஒவ்வொருவனும் எண்ணி, ஆராய்ந்து, தெளிய வேண்டிய உண்மைகள் இக்கேள்விகளிலேயே இருப்பதால், அக்கட்டுரை பற்றியும், இப் படநீக்கக் கொள்கை பற்றியும் நாம் விரிவாகப் பேசவில்லை. ஆனால் இவ்விரண்டு கொள்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு தான் எண்ணியதைச் செய்தே தீரவேண்டும் என்றும், எவர்க்கும், எதற்கும் இனி அஞ்ச வேண்டுவதில்லை என்றும், தமிழனின் உள்ளுயிர்ப்பும் தமிழக மறுமலர்ச்சியும் மிக அண்மையிலேயே தோன்ற விருக்கின்றன என்றும் அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

– தென்மொழி, சுவடி : 6, ஒலை : 5–6, 1968