பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

113

என்பதை, இந்த நாட்டின் நடைப்போக்கை அன்றாடம் தன் விருப்பம் போல் மாற்றி மகிழும் இந்திரா காந்தி முதல், சென்னைத் தியாகராய நகர் சாய்க்கடையில் கிடந்து நெளியும் புழு வரை, எவராகிலும் மறுத்துரைக்க முடியுமா? எத்தனை யெத்தனைச் சடங்கு சாங்கியங்கள்? எத்தனை யெத்தனைக் கழிப்பு, கருமாந்திரங்கள்? எத்தனை யெத்தனைப் பூசனை, புனைவுகள்? எத்தனை யெத்தனை விழா, வேடிக்கைகள்? கடவுள்கள் என்ற பெயரால் எத்தனை யெத்தனைக் கொண்டைத் தலைகளும், மொட்டைத் தலைகளும், பம்பைத் தலைகளும், காவி உடைகளும், கமண்டலங்களும்? இவற்றுக்கெல்லாம் என்ன விளக்கம், என்ன விளைவு, என்று இந் நாட்டின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு, ஒருபுறம் பூரிசங்கராச்சாரிகள், காஞ்சி காமகோடிகள் முதலியோர்களின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டே, ஒருபுறம் கால்சட்டை குப்பாயத்துடன் உருசியா முதலிய பொதுவுடைமை நாடுகளை வலம்வந்து கொண்டிருக்கும் கிரி முதலியோர் கூற முடியுமா? இவற்றால்தான் இந்தியா முன்னேற முடியும் என்று உறுதிகூற முடியுமா? இந்தியாவில் உள்ள கோயில் கோபுரங்களே, அவற்றுள் செருகியிருக்கும் வேல்கள், சூலங்களே இந்தியப் படைகளுக்குப் போதுமென்றால், அவர்கள் கைகளில் ஏன் வெடிகுண்டுகளும் வேட்டெஃகங்களும்? இவற்றிற் கெல்லாம் பிராமணியப் ‘பட்டாள’ப் படைத்தலைவர் இராசாசி விடை கூறுவாரா? இவை யெல்லாம் என்ன மூடத்தனங்கள்? எத்தனை வகைப் புரட்டுகள்? இவற்றில் கொட்டிக் கிடக்கும் செல்வங்கள் எவ்வளவு? சொத்துகள் எவ்வளவு? இந்தக் கோயில் பெருச்சாளிகளுக்குண்டான விளைநிலங்கள் எவ்வளவு? இவை யெல்லாம் ஏன் இந்தப் பொதுவுடைமைக்காரர்களின் கண்களிலும், ‘நக்சல்பாரி’களின் கைகளிலும் படவில்லை?

இராமாயணப் பாரதக் கதைகளை எழுதியும், சொல்லியுமே இராசாசிகளும், வாரியார்களும் இந்த நாட்டில் பிழைத்துக்கொள்ள முடியும்! ஆனால் இந்த மண்ணில் உள்ள புழுவொடு புழுவாய் நெளிந்து கிடக்கும் ஒரு விறகுவெட்டியும், செருப்புத் தைக்கும் ஏழையும் அப்படிப் பிழைக்க முடியுமா? அவர்களும் அவர்கள் பெண்டு பிள்ளைகளும் என்றென்றைக்கும் அந்தப் ‘பெரிய'வர்களின் கால்களைப் பிடித்துத் தானே பின்ழக்க வேண்டி உள்ளனர் அவர்கள் கண்ட கடவுள்களெல்லாம் அந்த இரும்புக் கோடரிகளும், எருமைத் தோல்களுந் தவிர வேறு எவை? அவர்கள் அப்படியே இருப்பதைத் தானே இராசாசிகளும், வாரிகளும், பூரிகளும் விரும்புகின்றன? இல்லையென்றால் அவர்களை வாழ்விக்க அல்லது குமுகாயத்தின் மேல்நிலைக்கு அவர்களை உயர்த்த இவர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் எவை? இராமாயணமும் மகாபாரதமுந் தாமா? அவற்றைப் படித்தாலும்