பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


உகந்தவையும், உண்மையும் அவைமட்டுந்தாம் என எண்ணிவிடக் கூடாது. நம் அடுப்பில் உள்ள நெருப்பும் நெருப்புத்தான். கதிரவன் நெருப்பும் நெருப்புத்தான். அதனால் நெருப்பு என்பதே கதிரவன் தான் என்பதோ, நம் அடுப்பில் இருப்பது தான் என்பதோ அறியாமை யாகும். இனி புறநெருப்பாக வன்றி அக நெருப்பாய் உள்ள மிளகாய் போலும் பொருள்களும் உள்ளனவென்று அறிதல் வேண்டும்.

இறைப்பொருளும் அப்படித்தான். இதை எழுதுபவனும் அவன் எண்ணும் கருத்தும், இக்கருத்தைப் புறப்படுத்திக் காட்டும் இவ் வெழுத்துகளும், அவ் வெழுத்துகளைப் படிக்கும் நீங்களும் இன்னும் யாவும் மெய்ப்பொருளின் கூறுபாடுகளே! ஒப்புதலும் மறுப்பும், விருப்பும் வெறுப்பும், அன்பும் சினமும், குளிர்ச்சியும் சூடும், உண்டும் இல்லையும் அப்பொருளின் கற்பிதத் தோற்றங்களே! இவையல்லாமல் நேரடியாக இறைப்பொருளை நுகர்பவர்களுக்கு இக் கற்பித அலகுகள் தேவையில்லை. காற்றை இயற்கையாக நுகர்பவர்க்கு விசிறியின் வீசல் தேவையில்லை யன்றோ?

ஆனாலும் மெய்ப்பொருளின் கற்பிதங்களாக வுள்ள கோயில்களும் அவற்றின் கற்பித வழிபாடுகளும் பொது மாந்தர்க்கு – அஃதாவது காற்றை நேரடியாக நுகரவியலாதவர்க்கு – ஒருவகையில் தேவையே! கால விரிவில் அவையும் மக்கட்குத் தேவையில்லாமல் போகலாம். அதுவரை கோயில்களும் இருக்கலாம்; அங்கு வழிபாடுகளும் நிகழலாம். ஆனால் அவை குறிப்பிட்ட ஒருவர்க்குத்தான் சொந்தம்; பிறரெல்லாம் ஒதுங்கி நிற்கத்தான் வேண்டும் என்பவர்கள் மத வெறியர்களே – மதத் திருடர்களே ஆவர். அவர்கள் என்ன இனத்தவராயினும், எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்களைக் குமுகாயக் குற்றவாளிகளாக்கிக் கூண்டில் நிறுத்துதல் வேண்டும். மதத் துறையிலும், மக்கள் உரிமை முறைகளிலும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும் அவர்களை வாழ்நாள் சிறைத்தண்டனைக் குள்ளாக்கி மக்களினமற்ற ஒரு தனித்தீவில்கூடக் குடியேற்றலாம்.

கோயில்களில் இருக்கும் வடிவங்களில் மட்டுமே இறைப் பொருள் இல்லை. உலக அனைத்துப் பொருள்களிலும் அப் பொருள் அதுவதுவாக நின்று இயங்குவதை எவரும் உணரலாம்; எவர்க்கும் உணர்த்தலாம். இத்தகைய புறவெளிச் சமயக் கோட்பாடுகளும், அகவொளிச் சமயக் கோட்பாடுகளுந்தாம் மாந்தர் யாவர்க்கும் ஏற்றவை, தக்கவை. பிறவெல்லாம் பூசல் விளைப்பவை. இயற்கை வழிபாடுதான் தமிழ்வழிபாடு. சிவனியமும் மாலியமும் இயற்கை