பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

151


வருகின்றன; வருவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப் பெறுகின்றன. ஆகவே, தமிழர்கள் இக்கால் இவ்வகையில், மிகமிக விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கும், தற்காப்பு முயற்சிக்கும் கொண்டுவரப் பெற்றிருக்கின்றனர். இது வெறும் மேலோட்டமான உணர்வுநிலைக் கருத்தன்று; இன்றைய நாட்டு அரசியல் நிலையின் குமுகாயப் பல்நோக்கு உண்மையாகும்!

பொதுவாகவே, இந்தியா என்றாலோ அஃது ஆரியர்கள் தேசம், இந்துக்கள் என்றாலே அவர்கள் ‘பிராமணர்கள்’ அல்லது அவர்களின் தலைமையை ஒப்புக்கொண்ட அடிமைகள்; இந்தியப் பண்பாடு, நாகரிகம் என்றாலே அவை பூணுரல் போடுவதும் குடுமி வைப்பதும், பஞ்சகச்சம் கட்டிக் கொள்வதுந்தாம் – என்று அமெரிக்க, பிரிட்டிசுக் கலைக் களஞ்சியங்கள், உருசியா, சீனா போலும் பொதுவுடைமைக் கொள்கை வாழும் நாடுகளில் வெளிவரும் நூல்கள் இவற்றில் எல்லாம் விளக்கம் வரும்படி, இங்கிருக்கின்ற பிராமண வரலாற்றுப் பேராசிரியர்கள் நூல்கள் எழுதி, அச்சிட்டு, அவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகவும் பரவலாகவும் சிறப்புறப் பரப்பி வருகின்றனர். இத்தகைய பேராசிரியர்கள் வரலாறு என்னும் பெயரில் எதை எழுதினாலும், அதை அச்சிட்டு வெளியிடுவதற் கென்றே தில்லியிலும் பம்பாயிலும் ஆரியப் பார்ப்பனச் சார்பான பணமுதலை வெளியீட்டகங்கள் பல உள்ளன. (உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், இவர்களால் எழுதப் பெறும் வரலாறு என்பது, இக்கால் ஆட்சித் தலைமையில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும், சார்பாகவும், நன்மை பயக்கும்படியாகவும், பெருமை ஏற்படும்படியாகவும் உண்மை நிகழ்ச்சிகளைத் திரித்தும், தவிர்த்தும், பொய் நிகழ்வுகளைக் கூட்டியும், சேர்த்தும் எழுதிக்கொள்ளும் கற்பனைக் கதையாகும்)

இவ்வரலாற்று நூல்களுக்கொப்பாக, வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வலிவான செய்தித்தாள்களும், அரசு விளம்பரத் துறைகளின் கீழ்ச் செயல்படும் வானொலி, தொலைக்காட்சிக் கருவிகளும் இவர்களின் ஆளுமையில் உள்ளதால் இவர்கள் தம் வேத புராணப் பொய்யுரைகளையும் புளுகுரைகளையும் மிக எளிதாகவும் விரைவாகவும் பரப்ப முடிகிறது. அத்துடன், இங்குள்ள காமகோடிகளும், வரதாச்சாரிகளும், நாராயண ராமானுசர்களும், ராம தேசிகன்களும் – தங்கள் விருப்பம்போல் கருத்தறிவிக்க முடிகிறது; கதைக்க முடிகிறது; காலப் பொழிவுகள் நடத்த முடிகிறது! இவர்கள் அனைவரும் ஒருமுகமாகவும் ஒரே மூச்சாகவும் அண்மைக் காலங்களில் கூறிவரும்