பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

155

கொண்டாலொழிய, இங்கு இந்துமதச் சார்பான கொள்கைகளையே நடுவணரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும். அத்தகைய ஏற்பாடுகளே படிப்படியாகச் செய்யப் பெற்று வருகின்றன. சமயச் சார்பற்ற அரசு என்று அரசியல் சட்ட அமைப்பில் கூறப்பெறுவது, பிராமணிய மதமான இந்துமதக் கொள்கைகளைப் பல்லாற்றானும் பரப்புவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாகவே, மாந்தன் செய்யும் அரசியல் ஆளுமை முயற்சிகளில் எந்த மதமோ, அதன் ‘தர்மம்’ என்னும் கோட்பாடுகளோ தலையிடவே கூடாது. ஏனெனில் அவ் விரண்டும் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், மக்களுக்கு மக்கள் மாறுபடுவன. அவற்றை அரசியல், பொருளியல், குமுகவியல், நயன்மை(நீதி) முதலிய துறைகளில் புகுத்தி, மக்களைப் பகுத்தறிவற்றவர்களாகவும், ஒரு சாரார்க்கு மற்றொரு சாராரை அடிமைப்பட்டவர்களாகவும் செய்துவிடல் கூடாது. ஏனெனில் அரசியல் நெறிமுறைகள் பெரும்பாலும் நிகழ்காலத்தைப் பற்றித் தீர்மானிக்கும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். சமயம் என்பதும், அதுகூறும் ‘தர்மம்’ என்னும் மதக்கோட்பாடும், கடந்த கால எதிர்காலத் தொடர்புடையவை. இன்னுஞ் சொன்னால் முற்பிறவி, பிற்பிறவிக் கற்பனை சான்றவை. அவை ஏற்கனவே வகுக்கப்பட்ட மக்களின் வேறுபாட்டுக் கொள்கை உடையவை. எனவே அவற்றை உட்படுத்தி எந்த வகையான வகையான நடைமுறை அரசியல் கொள்கையையும் வகுப்பதற்கு நாம் ஒப்புக்கொள்ளக் கூடாது. அவ்வாறு வகுக்கப் புகுந்தால், மக்களில் ஒரு பகுதியினர். தங்களைப் பிறவியில் மேம்பட்டவர்களாகக் கருதியும், தெய்வங்களுக்கு மிக நெருக்கமுடையவர்களாகப் புனைந்துரைத்தும், மற்ற பகுதியினரைத் தாழ்ந்த இழிவான பிறவியாளர்களாகவும், தெய்வத் தொடர்பற்றவர்களாகவும் கூறி, அடிமைப்படுத்தி, என்றென்றும், தாங்களே நிலையான ஆட்சியாளர்களாகத் தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில்தான் இந்தியாவின் இப்பொழுதைய நடைமுறை அரசியல் கொள்கைகள் இருந்து வருகின்றன என்பதை, அறிவுக்கவலை கொண்ட – நடுநிலை உள்ளங் கொண்ட – சான்றோர்கள் நன்கு உணர்தல் வேண்டும்.

இக்கால இந்தியாவின் அரசியல், பொருளியல், குமுகவியல், கலை, பண்பாடு, வெளிநாட்டுத் தொடர்பு முதலிய அத்தனைத் துறைகளிலும் இந்துமதக் கோட்பாடுகளே கடைப்பிடிக்கப் பெற்றுவருகின்றன. இந்து மதம் என்பது முற்றும் பார்ப்பன மதமே ஆகையால், பார்ப்பனரின் வேத, புராண, இதிகாசங்களில் கூறப்பட்ட கொள்கைகளே இன்றைய அரசியலாகவும், மற்ற மக்கள் துறை ஈடுபாட்டுக் கொள்கைகளாகவும்