பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

177


பார்க்கலாம். இங்குப் பேசப் பெற்று வரும் மொழிகளை எடுத்துக் கொண்டாலும் சரி; இங்குள்ள நாகரிகப் பண்பாட்டு நிலைகளை எடுத்துக்கொண்டாலும் சரி; அல்லது இங்குள்ள கலைகள், கல்வி நிலைகள், அரசியல் பொருளியல் கூறுகள் ஆகியவற்றுள் எதனை எடுத்துக்கொண்டாலும் சரி, அவை அத்தனையுள்ளும் திட்டுத் திட்டான இவ்விரண்டு திரவிட, ஆரிய இன மெய்ம்மக் கூறுகள் இழையோடுவதை வெளிப்படையாகக் காணலாம். இவை காலப் போக்கில் ஒன்றினோடொன்று அல்லது ஒன்றினுள் ஒன்று அல்லது ஒன்றுபோல் ஒன்று கலந்து ஊடாடுவதாகத் தெரிந்தாலும், எத்தனைக் காலத்திற்குப் பின்னும், இவ்விரண்டு தன்மைகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துத் தேர்ந்து கொள்ளும்படியாகவே, இவற்றின் அடிப்படைகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. எனவே, எத்துணைதான் தேசியப் பூச்சுகளை இவற்றின் மேல் பூசினாலும், அல்லது இவையிரண்டையும் ஒட்ட வைப்பதற்கான பற்றவைப்புகளைச் செய்தாலும் இவையிரண்டும் அகத்தும் புறத்தும் ஒட்டாமலே வேறுபட்டுத்தான் காட்சியளிக்கும் தன்மையுடையன.

ஏனெனில், இவையிரண்டும் நேர் எதிரான தன்மைகள் உடையன. ஒன்றையொன்று அழித்துத் தன்னுள் அடக்கும் வலிமை சான்றன. அந்த வகையில் இங்குள்ள திரவிட இன மரபுத் தன்மைகள் ஆரிய இனமரபுத் தன்மைகளால் காலச் சூழலில் வலிமை குறைக்கப்பட்டன; பதவி யதிகாரங்களால் சிதைக்கப்பட்டன. இந்தச் சிதைவே பின் வந்த ஆரிய இனமரபுக் கொள்கைக்கு வலிவாக அமைந்துவிட முடியாதெனினும், தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவுக்கு விடுதலை தந்து அதனைக் குடியரசு நாடாக ஆக்கி விட்டுச் செல்லும் வேளையில், வெள்ளைக்காரர்கள் அதன் இறைமை முழுவதையும் ஆரிய இனத்தவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந் நிலை அவர்களின் இனமரபை இன்னும் ஒருபடி வலிமைப்படுத்திக் கொள்ளும்படியான வாய்ப்பை அவர்களுக்குத் தந்துவிட்டது. இதன் வழி, அவர்களின் மேலாளுமை மிக்கோங்கி, பழந் திரவிட இனமரபு நிலைகள் அனைத்தும் சிறிது சிறிதாகச் சிதைதக்கப் பெற்றும் வலுக் குறைக்கப் பெற்றும், உருமாற்றப் பெற்றும் தாழ்த்தப் பெற்றும், வரலாற்று அடிநிலைகள் திரிக்கப் பெற்றும், இன்று இந்தியாவே ஆரிய நாடு என்னும் வகையில் வெளி உலகத்தவர்களுக்குப் பறைசாற்றப்படும் அளவில் பொய்களையும், புரட்டுகளையும் புனைருட்டுகளையும் கருவிகளாகக் கொண்டு, நிலைகள் தலைகீழாக்கப்பட்டு விட்டன. இந்நிலை அவர்களுக்குத் தேசியம் பேசுவது எளிதாகி விட்டது. இந்தியத் தேசியம் என்பது ஏதோ, அரசியல் படிநிலை வளர்ச்சி போலும், பொருளியல் நாகரிக முதிர்ச்சி போலும் திட்டமிட்டுப்