பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

181


ஊமைச் சட்டங்களாகவும் நடைமுறைக்குதவாத நொண்டித் திட்டங்களாகவுமே போகும் என்பதை, அரசியல் குமுகாய மாற்றங்களை விரும்பும் சிற்சில நல்லவுள்ளங்கள் உறுதியாகக் கருதிக் கொள்ளுமாக

இனி, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திரவிடராட்சி யென்றும், தமிழராட்சியென்றும் சிற்சிலரால் கடந்த காலங்களிலும் இக்காலும் அமைக்கப்பெற்றதும், பெற்றுவருவதுமான ஆட்சியும் அதே வகையில் செல்வர்கள் சாய்கால் உடையதும், மதங்களின் மேய்ப்பர்களால் ஆட்டிவைக்கப் பெற்றதும் பெறுவதுமான ஆட்சியே என்று கூறாம லிருப்பதற்கில்லை. எத்துணைப் பகுத்தறிவு வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஏழையர்மேல் இரக்கமுடையவர்களாக இருந்தாலும் முதலாளியத்திற்கும், மதங்களுக்கும் அஞ்சி, இவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் கொள்கைகளையும், திட்டங்களையும் சட்டங்களையும் கைநெகிழ்த்தே வந்துள்ளனர்; வருகின்றனர். சிற்றூர்ப்புறங்களில் வாழும் ஏழைமக்களைக் கொள்ளையடித்துப் பட்டணத்தில் உள்ளவர்களுக்கு ஒர் ஆரவாரமான வாழ்வுவாழக் கற்றுக் கொடுக்கும் சூதாட்டமே இன்றுள்ள அரசியலாகும். அதேபோல், அறியாமை மிகுந்த ஏழைமக்களை ஏமாற்றிப் பணம்பறித்து நகர்ப்புறங்களில் வேடிக்கைகளும் விழாக்களும் நடத்துவதே இன்றுள்ள மதக்கோட்பாடாகும். ஒருநாள் வரும் விளக்கணி(தீபாவளி) விழாவில், மதம் என்னும் பெயரால் புகைக்கப் பெறும் விலைமதிப்பற்ற எரிபொருள்களின் பொருளியல் மதிப்பு எவ்வளவு? வெடி மருந்துகளின் அளவு எவ்வளவு? அவற்றை நாட்டுக் காவல்நிலைக்கும், பிற உள்நாட்டு ஆக்கத்திற்கும் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அவ் விழாவுக்கு ஏன் தடைபோட அஞ்சுகிறது அரசு? தேவையெனில், எண்ணெய் முழுக்கும், தின்பண்டத் தீனிகளும், புத்தாடைப் புனைவுகளுமே நாட்டு நலம் கருதா அக் கொண்டாட்டக் கொடும்பர்களுக்கும் குறும்பர்களுக்கும் போதாவா? வெடிகள், பொறிப் புகைச்சல்கள் ஒரு கேடா? அவை இருந்துதான் ஆக வேண்டுமா? எந்த மடயன் எந்த ஆராய்ச்சியால் இத்தகைய வீண் ஆரவாரப் பொருளியல் கேடான விழா வேண்டுமென்று அரசுக்குச் சொன்னான்? இவ்வாரவார விழாவால் ஏற்படும் பொருள் கேடுகள் எவ்வளவு? எத்தனைக் கல்லெடை வெடிமருந்துகள்! எத்தனைக் கல்லெடைத் தாள்கள்! இரும்புகள்! மரங்கள்! வண்ணங்கள்! எத்துணை அழிவுகள்? எத்துணைப் பெருந் தொல்லைகள்! அமைதிக் கேடுகள்! எத்துணை வேலை வினைக்கேடுகள்! செல்வச்செருக்கர்கள் கொளுத்தும், அல்லது வெடிக்கும். ஆயிரக்கணக்கான உருபா