பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இடையிலுள்ள சிறுசிறு ஊர்கள் விட்டுவிடும் என்பதால்) நடந்து போய், மதத்தின் நச்சு வித்துகளை ஊன்றி வருவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இங்குள்ள மகாலிங்கச் செல்வர்களும், முத்தையச் செல்வர்களும் அன்றாடம் வாய்க்கரிசி போட்டு வழிநடத்தி வருகின்றனர். இவ்வாறு மதத்திற்கு முதலாளிகள் காப்பாகவும், முதலாளிகளுக்கு மதங்கள் காப்பாகவும் இருக்கும் இந்நிலையில் மக்கள் முன்னேற்றம் எப்படி நடைபெறும்?

இறைமை என்பது மதங்களின் மூட நம்பிக்கைகளால் வளர்வதன்று. மாந்த இனத்தின் மீமிசை மனவியற் கோட்பாடு அது. அவ்வுணர்வு முழுவதையும் பார்ப்பனச் சார்புடையதாக்கி, முதலாளிய வாழ்வுக்கு அடித்தளமாக்கி, மக்களைச் சேறாக்கிக் குழப்பும் இந்நிலைகளிலிருந்து அவர்கள் மீட்கப்பெற்றே ஆகல் வேண்டும். அரசியலறம் எவ்வாறு தூய்மையானதோ அவ்வாறே இறைமையறமும் தூய்மையானது. ஆனால், அவ்வரசியலை எப்படி நூற்றுக்கணக்கான கட்சிகள் பங்குபோட்டுக்காலில் மிதித்துக் கொண்டு தங்கள் நலமே குறிக்கோளாக மக்களை அலைக்கழிக்கின்றனவோ, அப்படியே இறையறத்தையும் ஆயிரக் கணக்கான மதங்கள் கூறுறபோட்டுக்கொண்டு, மக்கள் மனங்களையும் மூளைகளையும், இருட்புழைகளாகவும், நாற்றச்சேறாகவும் மாற்றிவருகின்றன. தூய்மையான இறையுணர்வு ஆரவாரமற்றது! மூட நம்பிக்கையற்றது! வானம் போலும் களங்கமில்லாதது! கதிரவன் போலும் இருண்மை நீங்கியது! மழைநீர் போலும் தெளிவானது! அதுதான் அறம்! அதுதான் இன்பம்! அதுதான் பொதுமை! அதுதான் பொதுவுடைமை! அஃது, இவ்வுலகில் பிறந்த எல்லார்க்கும் உணவு, உடை, உறையுள் சமமாகக் கிடைக்க வேண்டும் என்னும் கோட்பாட்டினது! இதுதான் தமிழ்ச் சான்றோர் கொள்கை! எனவே, இதற்கு மாறான அனைத்து மத ஆரவாரங்களையும், மூட நம்பிக்கைகளையும் நேர்மையான அரசு துணிந்து எதிர்த்தல், தடுத்து நிறுத்தல் வேண்டும்! அஞ்சுதல் கூடாது! ஆட்சிக்காக, பதவிக்காகக் கொள்கையன்று கொள்கைக்காகவே பதவி ஆட்சி! முயற்சி வெல்க!

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்!
- மணிமேகலை : 25-228-31
- தென்மொழி, சுவடி : 17. ஓலை : 4, 1980