பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பணிவிடை செய்து மகிழ்ச்சியூட்டுவதே மேலான அறம் (தர்மம்) மற்றவையெல்லாம் பயனில்லாதவை’ (மனு10 : 123) என்றும், சூத்திரன் ‘சுவர்க்க’த்திற்காவது, பிழைப்பிற்காவது பார்ப்பனனையே தொழ வேண்டும்’ (மனு 10 122) என்றும் கூறப் பெற்ற குமுகாய வரைமுறைகளின் படியே இன்னும் நடந்துவர வேண்டும் என்று ஆரியப் பார்ப்பனர்கள் விரும்புவது எத்துணை கொடுமையானது! சட்டம் என்னும் அரசியல் நெறிமுறையும், அறம் (தர்மம்) என்னும் குமுகாய நெறிமுறையும் பார்ப்பனர் நலத்துக்கே சார்பாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். ‘இந்த தேசத்தில் பிறந்த பிராமணர்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லா ‘தர்மத்’தையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மனுநூலின் கொள்கையாக (மனு 2 : 20) இருப்பதற்கு இந்நாட்டு அமைச்சர்களின் எவரேனும் அமைவு சொல்ல முடியுமா? அல்லது அவ்வாறு இல்லை என்று மறுத்துத் தருக்கமிட முடியுமா?

இந்த நிலையில் கீழே வீழ்த்தப் பெற்ற திராவிட இன மக்கள், நீண்ட நெடுங்காலத் துயிலினின்று, இன்று, ஒருவாறு விழித்துக் கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு, தென்னாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், தந்தை பெரியாரின் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத் தொண்டாலும், வடநாட்டில் பேரறிஞர் பர். அம்பேத்கார் போன்றோரின் அரு முயற்சியாலுமே ஏற்பட்டு, இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது என்பதை எவரும் மறுறத்துவிட முடியாது. இனி, இவ் வெழுச்சி யுணர்வு இந்தியா முழுவதுமே இக்கால், கிளர்ந்து பரவி வருகின்ற தெனினும், தென்னாட்டில் அது தீ வடிவில் பரவிப் புயலாக வருகின்ற தென்றே சொல்லுதல் வேண்டும். பெரியார் இல்லாத காலத்திலும், அவரால் ஊட்டப் பெற்ற இவ்வினைவுணர்வு, இவ்வாறு கொழுந்து விட்டுப் படர்ந்து பற்றி எரிவது, இன்றுள்ள திராவிடர் கழகத்தின் தொடர்ந்த செயற்பாடுகளாலும், அதன் பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணி அவர்களாலுமே என்பது சிறிதும் மிகையான கூற்றாக இருக்க வியலாது. தமிழர் நலம் கருதி, அவ்வப் பொழுது நம் இனவுணர்வு கிளர்ந்தெழும் வண்ணம் அவர் ஆற்றி வரும் அன்றாடச் சொற்பொழிவுகளும், எழுதி வரும் எழுத்துகளுமே நம் கூற்றுக்குச் சான்று பகரும். தமிழ்நாட்டில் பெரியாரை விட வேறு எவரும், மக்களுக்கு அறிவூட்டும் முயற்சியில் இவ்வளவு மிகுதியாகப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை; அதற்கடுத்தபடி அன்பர் வீரமணி அவர்கள் பெரியாரின் அப்பணியை அதே வகையில் தொடர்ந்து வருவது நமக்குப் பெரிதும் மகிழ்ச்சியூட்டுவதாகும்.

எவ்வாறேனும், இந்நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவேனும்,