பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

191

தமிழினம் முழு மீட்சி பெற்றாக வேண்டும். மொழியியல் வரலாற்றில் தாய்த் தமிழைத் தொடர்ந்து, பிற திரவிட மொழிகள் எவ்வாறு படிப்படியாய்த் தோன்றி விரிவடைந்து பெருகினவோ, அவ்வாறே, தமிழினத்தில் ஏற்படப்போகும் இவ்வின மீட்சியுணர்வு வளர்ச்சியுற்று, பிற திரவிட இனங்களையும் மிக விரைவில் பற்றுவது மிகவும் உறுதியும், நடைபெறப் போகும் உண்மையுமாகும். அப் பெரும்புரட்சிக்குப் புறநிலையில், நண்பர் திரு. வீரமணி அவர்களின் உழைப்பு மிகவும் உறுதுணையாக நிற்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த உண்மையைக் கண்ணுக்கு கண்ணாக நாம் குடந்தையில் இரண்டு நாட்களிலும் நடைபெற்ற மாநாடுகளில் காண நேர்ந்தது. அதன் பின்னர்தான் அவரின் இந்த இன மீட்சிப் போராட்டத்திற்கு தோளுக்குத் தோளாக நின்று ஊக்கமளிப்பது என்றும் நாம் உறுதி பூண்டோம்.

மொழி, நிலையில் நம் பாதை, திராவிடர் கழகத்தினர்க்குச் சற்று மாறுபட்டதுதான் எனினும், மொழியை அடியொட்டிய இனநலத்திலும், நாட்டு வரலாற்று மீட்சியிலும் நமக்கும் அவர்களுக்கும் நூற்றுக்கு நூறு ஒப்பமுடிந்த இணைவான பாதையாகவே உள்ளது. எப்படியும், பார்ப்பனியம் கடந்த மூவாயிரமாண்டுகளாகக் கால் வைத்துப் பரப்பிக் கொண்டுள்ள கொடுநிலையை இத்தலைமுறையிலேயே அகற்றியாகல் வேண்டும். அதன் ஆணிவேரையும் பக்க சல்லி வேரையும் வேரடி மண்ணையும் அடியோடு கல்லி எடுத்து எரித்துச் சாம்பலாக்கியே ஆகல் வேண்டும். அதன் முடிவு தமிழினத்தின் அழிவாகவும் இருக்கலாம்; அல்லது தன் கூரிய நச்சுப் பற்களால் இத்திரவிட இனத்தைக் குறிப்பாகத் தமிழினத்தைக் கவ்விப் பிடித்தபடி, அனைத்து நிலையிலும் அதன் வாழ்வியல் நலக் குருதியை உறிஞ்சி உயிர் குடிக்கும் பார்ப்பனியக் கொடும் பாம்பைச் சாகடிப்பதாகவும் இருக்கலாம். இவ்வரும் பெரும் பணிக்கு மற்ற தலைவர்களெல்லாம் காலெடுத்து வைக்கவும் அஞ்சும் போராட்டக் களத்தில், யார்ப் பரணி பாடிக் கொண்டு இறங்கித் தம்மையே ஈகம் செய்து கொண்டுள்ளார் திருவாளர் கி. வீரமணி அவர்கள். அவர்களின் தமிழின மீட்புக்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாம் தோள் தருவோம் என்று உறுதி கூறுகிறோம். அத்துடன் இறுதியாகத் தமிழினத்திற்கு நாம் சொல்லிக் கொள்வது, இது: வீரமணி தமிழ் இனத்திற்குக் கிடைத்த ஒரு வயிரமணி! அவர் முயற்சி வெல்க!

- தென்மொழி, சுவடி : 17. ஓலை 9, 1981