பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

193


மதத்தவர்களே பெருகி வளரவேண்டும். பிற மதத்தவர்கள் வலிவு பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்துடன் மத அடையாளங்களும் கடைப்பிடிக்கப் பெற்றிருக்க வேண்டும். எப்படியும் இவ் வழக்கம் ஒரு காட்டு விலங்காண்டிக்(Barbarian) கால வழக்கமே!

இக்காலம் அறிவியல் வளர்ந்து செழித்துவரும் காலம் மக்கள் மூடக்கொள்கைகள் தவிர்த்துப் பகுத்தறிவைக் கடைப்பிடித்துவரும் காலம்; குடியரசு மலர்ந்து வளர்ச்சிபெற்று வரும் காலம். ஆயினும், இக்காலத்திலும் ஒருவனை அடையாளம் காட்டுவதற்குப் பழைய முறைப்படியே சாதியும் மதமும் தேவைப்படுவனவாக இருப்பது, மத வெறியர்கள் இன்னும் ஆண்டு கொண்டிருப்பதாலும், ஆட்சி வலுப்பெற்றிருப்பதாலுமே ஆகும். இந்தியாவைப் பொறுத்த மட்டில், இங்குள்ளவர்கள் எத்தனை அறிவியலுணர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு இயல்பாகவே உள்ள மதவெறி காரணமாக, இத்தகைய மூடநம்பிக்கைகள் எளிதில் கைவிடப்பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. மதவுணர்ச்சியும் சாதியுணர்ச்சியும் இந்திய மத வெறியர்களின் அரத்த நாளங்களிலிருந்து அவ்வளவு எளிதில் சுண்டிப் போய்விடும் என்று எதிர்பாக்க முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இந்திய அரசியல் தலைவர்கள் மதவெறியர்களாகத்தான் இருப்பார்கள்; அல்லது மதவெறி பிடித்த மதக்குருமார்களின் ஆட்டுவிப்புக்கு ஆடுகின்ற அறிவியல் தெளிவற்ற மரப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு இங்குள்ள ‘இந்துமதம்’ அவர்கள் மூளைத்திரளைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றது. இந்து மதமும், அதற்கடிப்படையான வேதங்கள், மிருதிகளும் (மனுநூல் போன்றவை) என்ன சொல்கின்றனவோ அவை தாம், ‘தர்மம்’ (நெறி, கடைப்பிடி) (மனு 12-196 என்றும், வேதமறிந்த ‘பிராமணன்’ சொல்லுவதைத் தவிர, வேதமறியாத பத்தாயிரம் பேர் கூடிச் சொன்னாலும் அது ‘தர்மம்’ ஆகாது (மனு 12-13) என்றும், வழிவழியாகவே, அவர்களுக்கு மதவெறிசான்ற மூடநம்பிக்கை கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது. எனவே, இந்தியாவைப் பொறுத்த மட்டில் அரசியல், அறவியல், பொருளியல், குமுகாயவியல், கல்வி, பண்பாடு, ஒழுக்கம், பொழுதுபோக்கு முதலிய அனைத்துத் துறைகளிலும் ‘மதம்’ குறிப்பாக ‘இந்துமதம்’ தன் வலிந்த, கொடிய, நச்சுத்தன்மை கொண்ட சிறகுகளைப் போர்த்திக் கொண்டிருப்பதை எவ்வளவு பெரிய அறிவாளியாலும் மறுத்துவிட முடியாது.