பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இறைமையுணர்ச்சிக்கும் மதம் இன்றியமையாதது என்பதாக மதத் தொடர்பான அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். மீமிசை மாந்த வளர்ச்சி யென்பது இறைமை யுணர்வு ஒன்றுதான் என்று நினைத்துவிடக் கூடாது. பொது மாந்தவுணர்வு இறைமை யுணர்வின் பால்பட்டது. இறைவன் என்பவன் இப்புடவியில் எங்கேயோ ஓரிடத்தில் இருந்துகொண்டு, மாந்தவுயிர்கள் உட்பட எல்லா உயிரினங்கள், உயிரல்லினங்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கின்றான் என்பது அறிவியலுக்கோ மெய்யறிவியலுக்கோசுடப் பொருந்துவதன்று. இவ்வுலகும், இவ்வுலகஞ்சார்ந்த புடவியின் அனைத்துப் பொருள்களும் வலிந்த ஒரு பேராற்றலால் இயக்கப்பெறுகின்றது என்பது ஓர் உண்மையே! ஆனால் அப் பேராற்றல் மாந்த வடிவமோ வேறெந்த வடிவமோ கொண்டதாக இருத்தல் முடியாது. அதன் வேறுபல கூறுகளும் தன்மைகளும் அனைவர்க்குமே பொதுவான ஆற்றலுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டனவாகவே இருத்தல் வேண்டும். அப்பேராற்றல் இங்குள்ள மதம் என்னும் ஒரு மாந்த அமைப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றது என்பது மெய்யான கோட்பாடு அன்று. மதம் என்பது முற்றிலும் மாந்த அமைப்பே. மாந்தன் என்பவன் உலகியலுணர்வு சான்றவனே. எனவே, அவன் வகுக்கும் எத்தகைய நெறிமுறைகளானாலும் அவை அனைத்து மக்களுக்குமே பொதுவானவையாக அமைந்துவிட முடியாது. மதமும் இத்தகைய ஒர் அமைப்பே ஆதலின் அஃது எல்லாருக்கும் பொதுவான நயன்மை(நீதி) வழங்கிவிடும் என்று கூறிவிட முடியாது. ஒரு மதம் இன்னொரு மத்திற்கு முரண்பாடுள்ளதாகவும், அதனால் உலகில் பல மதங்கள் இருப்பதுமே நம் கொள்கையை வலுப்படுத்துவதற்குரிய போதுமான சான்றாகும். இவற்றில், ‘எங்கள் மதந்தான் உயர்ந்தது; சிறந்தது; கடவுளால் உண்டாக்கப்பட்டது; ‘அநாதி’ அதில்தான் நெய் வடிகிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கையான ஓர் ஏமாற்றுக் கொள்கையே ஆகும். எனவே, இந்துமதம் என்பதும் ஒரு பெரிய ஏமாற்று அமைப்பே இதனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே பெரிதும் நன்மை உண்டாகி வருகிறது. மற்றவர்க்கெல்லாம் தீமையே உண்டாகி வருகிறது. இது முற்றிலும் மெய். இதைப் பொய் யென்று எவரும் மெய்ப்பிக்க முடியாது.

இந்து மதம் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களிலும் மிகக் கேடான மதம், இழிவான மதம். இதில்தான் பலகோடிக் கடவுள்கள் கற்பிக்கப் பெற்றிருக்கின்றன. அவையும் பல குடும்பம் குடும்பமாக வளர்ந்து, ஒரு பெரும் கடவுள் குமுகாயமாகவே ஆட்சி செய்து