பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

197


வருகின்றன. இந்துமதத்தில் எந்த வகையான மாந்த உயர்ச்சிக்கும் ஒர் எள்ளின் மூக்களவும் வழியில்லை. இது மக்கள் பொதுவான அமைப்பும் இல்லை. மக்களைப் பல நூறு சாதிகளாக வேறு பிரித்து, அவர்களுக்குள் இழிவு தாழ்வு கற்பிக்கின்ற ‘வருணாசிரம’க் கொள்கையே இந்துமதத்திற்கு அடிப்படையானது. இதன் வலிந்த ஆட்சியாலேயே இங்குள்ள மக்கள் தாழ்த்தப்பட்டும், வீழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும், நலிக்கப்பட்டும், மெலிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், பழிக்கப்பட்டும், இழிக்கப்பட்டும் எவ்வகை மன, அறிவு, வாழ்வு, உரிமை முன்னேற்றமுமின்றிக் கிடக்கின்றனர். இத்தனைக்கும் இக்கொடுமைகளை இவர்கள் உணர்ந்திருந்தும், இதனின்று வெளியேறி விடுபட முடியாமல் இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை, இம் மதக் கட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டியுள்ளது; மூச்சு முட்டிச் சாக வேண்டியுள்ளது. இந்துமதக் கோட்பாடுகளை நம்பியே முன்னேற்றம் ஏதுமின்றி அழிந்துபோன குடும்பங்கள் பல. அழிந்து கொண்டிருக்கின்ற குடும்பங்களும் பற்பல.

இன்னும் தெளிவாகச் சொன்னால், உலகில் மிகவும் மூத்ததும், முதலானதும், நாகரிகம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் சிறந்திருந்ததுமான தமிழினம், இந்துமதத்தாலேயே நலிவுற்றது; மெலிவுற்றது; அடிமையுற்றது; மிடிமையுற்றது. பல ஆயிரக் கணக்கான பிரிவுகளாகப் பிரிந்து வலிவு இன்றிப் போனது. இறுதியில் தன் அனைத்து நலன்களையும் இழந்து இன்று அழியும் நிலையில் உள்ளது. இந்த நிலைகளை, இங்கிருந்த பெரியாரைப் போலும் இனத் தலைவர்களால் இன்று ஒருவாறு உணர்ந்துகொண்டு, மீண்டும் தன் இழிவு அழிவுகளைத் தடுத்து நிறுத்திக்கொள்ளும் போக்குடன் ஒருவாறு விழிப்புற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழர்கள் மேலும் இந்துக்களாய் இருக்கத் தேவையில்லை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்தும் அக் காட்டுவிலங்காண்டிக் கொள்கைகளையே தன் சிறப்பு நிலைகளாகக் கொண்ட அந்த இந்து மதத்தினின்று வெளியேறி உரிமைக் காற்றை நுகர்தல் வேண்டும். முன்னேற்றப் பெருவெளியில் வீறுநடை யிடுதல் வேண்டும்.

மதம் மக்களுக்கு நஞ்சு! அஃது ஒரு பேரிருள்; மடமைகளின் கலவைச்சேறு! அது மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையற்ற ஒன்று. அன்பு, அறிவு, பண்பு, ஒழுக்கம், ஒப்புரவு, பொதுமை, அறவுணர்வு போன்ற எந்த ஒரு நல்லியல்புக்கும் ஓர் இம்மியளவுகூட அஃது உத்வுவதில்லை. அதிலும் இந்துமதம் மிகக் கொடிய ஒரு நச்சுப்பாம்பு!