பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


மடமை நிரம்பிய புதைசேற்றுக் குழி! இதனால் கடிக்கப்படாமல், புதையுண்டு போகாமல் தப்பித்துக்கொள்ளத் தமிழர்கள் உடனடியாக, ஒட்டு மொத்தமாக, இதனைவிட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவரை தமிழர்கட்கிடையில் உள்ள மூட நம்பிக்கைகளும், இழிவுகளும் சாதிக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. இந்து மதப் பூசல்களும் சாதிக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாத வரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சத்திலிருந்தும், மேலாளுமையிலிருந்தும் தமிழர்கள் மீளவே முடியாது. அவ்வாறு மீளாதவரை தமிழினமும் தமிழ்மொழியும் தலைதுாக்க முடியாது. தமிழ்நாடும் தன்னிறைவு பெறமுடியாது.

எனவே, தமிழர்கள் தம் முன்னேற்றத்தின் முதல் முயற்சியாக இந்துமதப் பிடியை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். இந்து மதத்திலிருந்து வெளியேறினால் எந்த மத்தில் சேருவது என்ற கேள்வியே இப்பொழுது வேண்டா! எந்த மதமும் மூடநம்பிக்கையின் அடிப்படையிலேயே கட்டப்படுவது. அங்கு உரிமையுணர்வுக்கு வழியில்லை. அறிவு வளர்ச்சிக்கு விடிவில்லை. மதம் ஒர் ஒருமையுணர்வு வளர்ச்சிக்குத் தேவையென்று சிலர் கருதினால், இந்துமதத்தினின்று வெளியேறிய தமிழர்கள், தங்களைத் ‘தமிழமதம்’ ‘திருவள்ளுவ மதம்’ என்று கட்டுக்குள் வேண்டுமானால் அடைவித்துக் கொள்ளலாம். ஆனால் அவையுங்கூட ஒரு காலத்தில் இந்துமதம் போல் வளர்ந்துவிடா என்பதற்கு உறுதி எதுவும் இல்லை. எனவே, இப்பொழுதைக்குத் தமிழர்கள் தங்கள் இன அழிவினின்று விடுபட வேண்டியிருப்பதால் எந்த மதமும் நமக்குத் தேவையில்லை என்பதுவே நம் கொள்கையாகும். எதுவும் நமக்காகத்தானே யொழிய, எதற்காகவும் நாம் என்று இருப்பது ஒர் அடிமை மனப்பான்மையே! எனவே, ‘இந்துமதம்’ ஒழிக. நாம் ‘இந்து’ என்னும் அடிமைப்பெயர் ஒழிக!

- தென்மொழி, சுவடி : 17, ஒலை: 10, 1981