பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதம் பெரிதில்லை; மக்கள் நலமே பெரிது!

நீண்ட நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு குலமக்கள், அண்மையில், அவர்களை அப்படி அடக்கியும் ஒடுக்கியும் வைத்திருப்பது இந்துமதமே என்று கண்டறிந்து அம்மதக் கட்சிகளிலிருந்து தங்களை உடைத்துக்கொண்டு, பொதுநிலைச் சமவாய்ப்புக் காற்றை நுகர்வதற்கென்று, வெளியேறிப் போகின்ற செய்தி பரவலாக வந்துகொண்டிருக்கின்றது. நெல்லையில் உள்ள மீனாட்சிபுரத்து மக்கள் இதைக் கடந்த பிப்பிரவரி மாதம் தொடங்கி வைத்த பெருமையைப் பெற்றுள்ளார்கள். அவர்களைத் தொடர்ந்து, இராமநாதபுரம், மதுரை, தஞ்சை, வடவார்க்காடு, புதுவை, செங்கழுநீர்ப்பட்டு ஆகிய தமிழ்நாட்டுப் பகுதிகளிலிருந்தும், குசராத்து, தில்லி, பெங்களூர் முதலிய பிற வடநிலப் பகுதிகளிலிருந்தும், தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்கள் இந்துமதத்தினின்று அணி அணியாக - நூறு நூறாக - ஆயிரம் ஆயிரமாக - வெளியேறிக் கொண்டு வருகின்றனர். இந்துமதத்தை விட்டு வெளியேறியவர்கள் வேறு எந்த மதத்தில் சேர்ந்திருக்கின்றனர் அல்லது சேருகின்றனர் என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்களும் மற்றவர்கள் போல் மக்களாக மதிக்கப்பட வேறு எந்த மதம் வாய்ப்பளிக்கின்றதோ, அதில் அவர்கள் சேரட்டும்; அல்லது சேராமல் போகட்டும். அஃது அவர்களைப் பொறுத்த செய்தி. கணவனின் கொடுமை தாளாது மணவிலக்குக் கோரும் ஒரு பெண், வேறு மணம் செய்துகொள்ளப் போகிறாளா அல்லது மணம் செய்யாமலேயே வாழப்போகிறாளா என்பது அவளைப் பொறுத்த செய்தி. அதில் தலையிட மணவிலக்குத்