பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

207


மதம்தானே தமிழர்களைச் ‘சூத்திரர்கள்’ ஆக்கி வைத்திருக்கிறது. எந்த மதத்தில் உங்கள் மதத்திற்குரிய நூற்றுக்கணக்கான சாதிப் பிரிவுகள் இருக்கின்றன?

இந்து மதத்தையும் இந்து மதத்தின் கயமையையும் நாங்கள் விளக்கிப் பேசித் தமிழினத்தை மீட்க உழைத்தால் உடனே எங்களுக்குப் பிரிவினைக்காரர்கள் என்று பட்டம் சூட்டுகின்றீர்கள். யார் பிரிவினைக்காரர்கள்? கோடிக் கணக்கான ஒரின மக்களை இவன் பறையன், இவன் பள்ளன், இவன் முதலி, இவன் கவுண்டன் என்று கூறு கூறாகப் பிரித்துப் போட்டு, இவனோடு பழகாதே. இவனோடு உறவு வைத்துக் கொள்ளாதே. இவனைவிட நீ உயர்ந்தவன். இவனை விட நீ தாழ்ந்தவன் என்று உயர்ந்த ஒரு மக்களினத்தைப் பிரித்துப் போட்ட நீ பிரிவினைக்காரனா? ஒரு மொழி, ஓர் இனம், ஒரு பண்பாடு, ஒரு நாகரிகம் என்னும் பெயரில் மக்களினத்தை இணைக்கின்ற நான் பிரிவினைக்காரனா? யாரை ஏய்க்கின்றீர்கள்? இனியும் இந்தப் பிரிவினைப் பேச்சும் மிர்ட்டலும் பயனளிக்க மாட்டாது. மக்களுக்குப் பயன்படுகின்ற வினைகளை உருப்படியாக என்ன செய்தீர்கள்?

பயன்படாத சட்டங்கள்:

மக்களுக்கென்ற நீங்கள் போட்ட சட்டங்கள் என்ன ஆயின? போட்ட சட்டங்கள் பயனை விளைத்திருக்குமாயின் நாட்டில் வறுமை இருந்திருக்குமா? சாலை ஓரத்துச் சாக்கடையில் மக்கள் புழுக்களாய் நெளிந்து சாவார்களா? ஒவ்வோர் ஆண்டும் பாடத் திட்டத்தை மாற்றவில்லையா? மூன்று ஆண்டுக்கு முன் படித்த பாடத்தைப் பழைய பாடம் என்று திருத்திக் கொள்ளும் நீங்கள் மக்களுக்குப் பயன்படாத சட்டங்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்தாலென்ன?

சிங்கப்பூருக்கு நான் சென்றிருந்தபோது அந்த நாட்டின் சிறப்பைக் கண்டு வியந்தேன். அப்பொழுது அந்த நாட்டு அலுவலகங்களின் சுவர்களை என் கண்கள் துழாவின. அன்பர்கள் என்ன தேடுகின்றீர்கள் என்றனர். இவ்வளவு சிறப்பாக இந்த நாட்டை அமைத்து ஆளுகின்ற தலைமை அமைச்சரின் ஒளிப்படத்தைத் தேடுகின்றேன் என்றேன். அதற்கு அவர்கள் “எதற்கு அலுவலகங்களில் இந்த நாட்டுத் தலைமை அமைச்சரின் படம் மாட்ட வேண்டும்? அவ்வாறு எங்கும் நாங்கள் மாட்டுவதில்லை. அப்படி மாட்ட வேண்டும் என்ற உத்திரவும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதற்கு அவரின் படம்? ஒரு தாய்க்கு அன்றோ தான் பெற்ற மக்களைப் பற்றிய நினைவு இருக்கவேண்டும்?” என்று விடை கூறினர்.