பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

நம் நாட்டை நினைத்துப் பாருங்கள்! சுவரின் அளவை வைத்துக் கொண்டு அதன் நீள அகலகங்களுக்கேற்ப அடித்து ஒட்டிக்கொள்ளும் பெரிய பெரிய சுவரொட்டிகள்! எங்குப் பார்த்தாலும் இந்திரா காந்தி! எங்குப் பார்த்தாலும் ம.கோ.இரா. (எம்.சி.ஆர்) எண்ணிப் பார்க்க வேண்டும்! ஆரவாரங்களும் அச்சடித்த சுவரொட்டிகளும் மக்களை ஈடேற்ற முடியுமா? இவைதாம் அரசியலா? அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்வியல் கட்டுமானம் என்பதை என்றாவது நாம் பின்பற்றி இருக்கின்றோமா?

மனம் கெடாதா?

மேலாடையில்லாது பெண்ணொருத்தி தெருவில் நடந்து போவாளானால் அவளைக் காவலர்கள் உடனே தளைப்படுத்தி அழைத்து வந்து வழக்குப் போடுவர். பொது மக்களின் மனவுணர்வைக் கெடுக்கின்ற குற்றத்தை நீ செய்தாய் என்று தண்டனை கொடுப்பார்கள். ஆனால் பெண்ணொருத்தியின் உடை களைந்த கொழுப்பு மேனியை வழுவழுப்பு அட்டைகளில் படமெடுத்துக் கடைக்குக் கடை தொங்க வைத்துள்ளார்கள்? திரைப்படத்தில் எல்லாம் வெளிச்சம்! சாலையில் மேலாடையில்லாமல் சென்ற பெண்ணின் செயல் மக்கள் மனவுணர்வைக் கெடுக்கும் என்றால் இதழ்களிலும் திரைப்படத்திலும் வெளிப்படுத்தும் படங்களால் மனம் கெடாதா?

நாங்களும் காவலர்கள்தாம்?

காவலர்கள் எண்ணவேண்டும். இந்த நாட்டின் காவலர்களும் காவல் துறை அதிகாரிகளும் எங்கே மதிக்கப்படுகின்றனர்? அமைச்சர்களை வரவேற்கவும் வணங்கவும் அவர்களுக்கு கையாட்களாகவும் அன்றோ பயன்படுத்தப்படுகின்றனர். மக்களின் நலனுக்கென்று மக்களின் வரிப் பணத்தால் இயங்கும் காவலர்களும் இக்கொடிய அரசியலால் குலை நடுங்குகின்றனரே! அருமைக் காவலர்களே! நீங்கள் மட்டுமேதான் காவலர்களா? நாங்களும் காவலர்கள்தாம். நாங்கள் மொழிக் காவலர்கள், இனக் காவலர்கள், பண்பாட்டுக் காவலர்கள்.

தமிழினம் இன்று புறப்பூசலாலும் உட்பூசலாலும் அலைக்கழிக்கப் படுகின்றது. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தமிழினத்தின் நலங்கருதித் தோற்றுவிக்கப்பட்ட ஓர் உண்மை உழைப்பியக்கம். தமிழர்களும் தமிழினத் தலைவர்களும் அகப்பூசலை விட்டொழித்துக் கொண்டு புறப்பூசலையும் அப்பூசலை விளைப்போரையும் தகர்த்தெறிய அணியமாக வேண்டும். அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது.

- தமிழ்நிலம், இதழ் எண் : 1, 1982