பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

211


இவற்றின் மூடக் கிறுக்கில்தான் தீபாவளி போலும் புரட்டுத் தேசியப் போக்கிரித்தன விழாக்கள். இந்நாட்டில் வியத்தகு அறிவியல் வளர்ச்சியுற்ற இந்தக் காலத்திலும், மிக மிகத் தாராளமாகக் கொண்டாட வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றன. மக்களும், தங்களின் ஏழைமைத்தனத்தை மறந்து, அறியாமையை மறந்து, அடிமைத் தன்மையை அறவே மறந்து, கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச காசுகளையும் பட்டாசாகக் கொளுத்தி நாட்டின் ஆக்கத்தைக் கரியாக்கி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு எப்பொழுது தான் வருமோ, தெரியாது!

தமிழினத்திற்கு மட்டும் ஒரு சொல்! இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனத் தேசியமே! பார்ப்பன ஆளுமை, வேத அதிகாரம், மனு நூல் சட்டம், இந்து மதக் கோட்பாடு, மக்களின் மூட நம்பிக்கை - இவற்றை வலிவாகக் கட்டிக் காப்பதே தேசியம்! இத்தேசியத்தின் அடிப்படையில்தான் பலநூறு கோடி உருபாக்கள் மத விழாக்களுக்குச் செலவிடப்படுகின்றன! பல நூறுகோடி உருபாக்கள் தேசியத் திருவிழாக்கள் என்னும் பெயரில் வாரியிறைக்கப்படுகின்றன! பல கோடி உருபாக்களில் விளையாட்டு வேடிக்கைகள், குதிரைப்பந்தயக் கொண்டாட்டங்கள் என்னும் பெயரில் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன! பல கோடி உருபாக்கள், கலைகள் திரைப்படங்கள் என்னும் பெயரில் காமக் களியாட்டங்களில் கரைக்கப்படுகின்றன ! நாட்டின் உண்மை நிலையோ பட்டை உரித்த மரம் போலப் பச்சையானது! எங்குப் பார்த்தாலும் ஏழைமை ! ஏழைமை ! ஏழைமை உடலொடியச் சாறுபிழியப்படும் பாட்டாளி மக்கள்! அவர்களின் எலும்புக் கூட்டுப் பரிவாரங்கள்: ஆமாம், அவர்களின் வாழ்விடங்களோ, குப்பை மேடுகள் சந்தி சதுக்கங்கள் ! சாய்க்கடை ஒரங்கள்! புழு, பூச்சிகள் நெளியும் புழக்கடைச் சேறு! உருப்படுமா இந்த நாடு?

- தமிழ்நிலம், இதழ் எண் : 3, 1982