பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

225

மக்களை மீட்டு, மக்கள் இனத்தை ஒன்றுபடுத்த ஆன்மீக நெறி வேண்டும் என்கிறாரே இவர், அந்தப் பகுத்தறிவும் சீர்திருத்தமும் முயன்றுதாமே இவரைப் படிக்க வைத்து அமைச்சர் வேலை பார்க்கவும் உதவின. இல்லையெனில் இங்குள்ள, சிலர் கூறும் ஆன்மீக நெறிப்படி இவர் மாடு கன்று மேய்த்துக்கொண்டோ ஊரூராகச் சென்று வணிகம் செய்துகொண்டோதானே கிடக்க வேண்டும்! இதில் எதை ஆன்மீக நெறி என்கிறார் வீரப்பன்? 'மக்கள் இனத்தை ஒன்றுபடுத்த 'ஆன்மீக' நெறி வேண்டும்' என்கிறாரே இந்த வீரப்பனாழ்வார். இங்குள்ள மதங்கள் எல்லாம் இத்தனை நூற்றாண்டுகள் வரையில் ஆன்மீகம், மதம், தர்மம், மோட்சம், புராணம், இதிகாசம் என்று பல வகையான ஏமாற்று முத்திரைகளால், இங்குள்ள மக்களை யெல்லாம் துண்டு துணுக்காக வேறுபாடுகள் அடையச்செய்து, அவர்கள் தலைகளிலெல்லாம் மிளகாயரைத்து அவர்களை அடிமைகளாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், மூடநம்பிக்கை உடையவர்களாகவும் ஆக்கி, இன்றுவரை அச் சகதிகளிலிருந்து மீளமுடியாதவர்களாகச் செய்து வைத்திருப்பதை அறியாத குருடரா இவர்?

இனி, இந்த வீரப்பன், தெரிந்தோ தெரியாமலோ, இந்த ‘ஆன்மீக’ நெறியாளர்களுக்கெல்லாம் ஒரு பொதுஇசைவு அஃதாவது உரிமம் வேறு வழங்கியிருக்கிறார். ‘ஆன்மீகப் பணி செய்துவரும் நிறுவனத்தின் மீது எந்த அரசுச் சட்டமும் நுழையாதாம்; அதன் செயற்பாடுகளில் குறுக்கே வராதாம்' எப்படி? இந்த திறந்தவாய் அமைச்சரின் சிறந்த தடை நீக்கம் செய்யும்படியான பேச்சு! ஏற்கனவே கயவர்களும், களியர்களும், திருடர்களும், முடிச்சுமாறிகளும், கள்ள உருபாத்தாள் அடிக்கும் பேர்வழிகளும், சாராயக் கடைக்காரர்களும், கடத்தல்காரர்களும் ஒன்றாகப் போயடங்கிக் கொள்ளையடிக்கும் கூடாரமாகத்தான், இவர் கூறும் ‘ஆன்மீக’ நெறியை வளர்க்கும் மடங்கள், நிறுவனங்கள், கோயில்கள், மடவளாகங்கள்(ஆதீனங்கள்) முதலியவை இருந்து வருகின்றன. இனி, அமைச்சரே அதுவும் ‘அறநிலைய’ அமைச்சரே ‘உத்தரவு’ போட்டுவிட்டார்! அரசுச் சட்டமோ, திட்டமோ எதுவும் அங்கு நுழையாதாம்! இனி, ‘ஆன்மீக’ நெறி வளர்ப்பவர்களுக்குக் கொண்டாட்டந்தான்! பகற் கொள்ளைக்குப் 'பந்தம்' பிடிக்க வீரப்பனார்' உள்ளவரை, ‘மதம்’ பிடித்த ‘ஆன்மீக’ அடிகளார்களுக்கு இனிமேல் குறையேது? எப்படியோ இங்கு ஏற்கனவே உள்ள கொஞ்சநஞ்சம் மாந்தத் தன்மைக்கும் இனி அறவே இடமில்லை என்று ஆகிவிட்டது! வாழ்க வீரப்பச் சூத்திரனார்! வளர்க அவர்தம் கொற்றம்!

- தமிழ்ச்சிட்டு, இதழ் எண் : 18, 1983