பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இவ்விடத்தில் நடுவர் மாண்புமிகு நடராசன் அவர்கள் குறுக்கிட்டுப் பெருஞ்சித்திரனார் அவர்களை, ‘இதை எந்த அடிப்படைச் சட்டத்தின்கீழ்க் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் இந்த நாட்டின் குடிமகன். அரசுக்கு மற்றவர்களைப் போலவே வரி செலுத்துகின்றேன். இந்திய அரசின் அமைப்பியல் சட்டத்தில் 51(அ) பிரிவு, குடிமக்களின் உரிமைகளைக் கூறிக் கடமைகளை வலியுறுத்துகிறது. அந்தப் பிரிவில், இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், அறிவியல் முறையான அணுகுமுறை, மாந்தநேயத் தன்மை மற்றும் ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் காப்பதற்கும் ஆவன செய்வதைத்தன் கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறுகிறது. எனவே அச்சட்டப் பிரிவு கொடுத்த உரிமையில் நான் அரசின் செயலை அறிவியலுணர்வுடன் அணுகித் தவறென்று கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

அதற்கு நடுவர், “அறமன்றம் பொதுமக்களின் மூட நம்பிககைளைத் தடுத்து நிறுத்த முடியாதே! அதை வழக்காளர் போன்ற பொதுநலம் நாடுபவர்கள்தாம் பொதுமக்களிடம் சென்று அறிவுக்கருத்துகளைப் பரப்ப வேண்டும்” என்றார்.

அதற்கு விடையாக, பாவலரேறு, “அந்த வேலையை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அரசே இத்தகைய மூடநம்பிக்கைகளை வளர்க்கின்ற செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் என்ன செய்வது? ஆகவேதான், வேறுவழியில்லாமல் அறமன்றங்களின் உதவியை நாங்கள் நாடவேண்டியுள்ளது” என்று கூறி, மேலும் தொடர்ந்து தம் வழக்குத் தொடர்பான உட்கூறுகளைக் கீழ்வருமாறு எடுத்துரைத்தார்:

“இந்திரா காந்தியின்மேல், மக்கள் பேரன்புகொண்ட காரணத்தால், அந்த அன்பை, இரக்கத்தைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அரசு தானே முன்வந்து, திட்டமிட்டு, மக்களின் வரிப் பணத்தில், ஏராளமான பொருட்செலவில் செய்யும் தேவையற்ற, இது போன்ற மூட நம்பிக்கை நிறைந்த ஏமாற்றுச் செயலுக்கு, மக்களும் ஆதரவு தரவே செய்வர். அ'து ஒன்றும் வியப்பில்லை. இப்படி நம்பிக்கை கொண்ட மக்களை மேலும் மதத்தின் அடிப்படையில் ஏமாற்றுவது எளிது. ஆனால் இவ்வாறு எளிதாக மக்களின் மதவுணர்வுகளைப் பயன்படுத்தி, ஏமாற்றும்படியான செயலை அரசே செய்யக்கூடாது என்பதுதான் நம் கருத்து.