பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

245

அந்த மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு, அதன் விதையை நல்ல நிலத்தில் ஊன்றி, நறுநீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். அப்பொழுது அதனால் கிடைக்கும் பயனும் நல்லதாகவே இருக்கும்.

இறைமை என்பது ஒர் இயற்கை உணர்வு. அது வேறுபாடற்றது; உரிமையைத் தூண்டுவது; விடுதலைக்கு வேரானது; சமநிலை உடையது; சமத்துவம் கற்பிப்பது இன்பம் நல்குவது; பகைமையைத் தவிர்ப்பது; மாந்தனின் அகங்காரத்தை அகற்றுவது; அறிவை உணர்த்துவது; அன்பை வளர்ப்பது; அறியாமையைத் தூர்ப்பது; தந்நலத்தை மறுப்பது; பொதுநலத்தைத் தூண்டுவது; மக்களை ஒன்றுபடுத்துவது; பாகுபாட்டை அவிழ்ப்பது; இறைமைக்குச் சாதியில்லை; ஏழைமையில்லை. இதற்கு நேர்எதிரான மெய்ம்மங்களைக் கொண்டதே மதம்!

இதேபோல்தான் முதல் (பொருள் - Capital) என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு மூலமானது; முதலானது; உரிமையைத் தூண்டுவது; உழைப்பை உணர்த்துவது மக்கள் சமத்துவத்திற்கு அடிப்படையானது; வேறுபாட்டை அகற்றுவது; இன்பம் நல்குவது; பகையைத் தவிர்ப்பது; மாந்தனிடம் ஆக்க உணர்வுகளான அறிவு, அன்பு இவற்றை வளர்த்தெடுப்பது; சாதியைத் தொலைப்பது; மக்களை ஒன்றுபடுத்துவது!

ஆனால், இறைமை மதமாக வளர்ந்து தீமை தருவது போல், முதல் முதலாளியமாக வளர்ந்து தீமை தருகிறது. எனவேதான் முதல் தேவை; முதலாளியம் தேவையில்லை - இதேபோல் இறைமை தேவை, மதம் தேவையில்லை - என்கிறோம்.

இனி, பொதுவுடைமையை வளர்க்கப் புறப்பட்ட நம் இளைஞர்கள், இவ்வேறுபாடுகளை நுணுகி ஆய்ந்து உணராமல், மதத்தை ஒழிக்கின்ற நோக்கத்தோடு, சாதியை ஒழிக்கின்ற நோக்கத்தோடு, அவற்றுக்கு அடிவேராக - வித்தாக - இறைமை இருப்பதாக கருதிக்கொண்டு, அதையும் ஒழிக்க எண்ணங் கொண்டிருக்கிறார்கள்.

இறைமை இயற்கையான ஒர் உணர்வாதலின், அதை ஒழிக்க இயலாமல் அல்லற்படுகின்றனர். மதம் இறைமையின்மேல் கட்டப் பெற்ற ஒரு செயற்கை உணர்வு. அதில் மக்களினத்துக்குத் தேவையல்லாத - தீங்கான பல கூறுகள் இருப்பதால், அதை ஒழித்தே ஆகவேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் அதற்காக இயற்கை உணர்வான இறைமையையே ஒழிக்க முயல்வதால்தான்