பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

289


கடுஞ்சினம் வருகையில், அவை நம்முடையன என்ற நினைவும் கூடவே வந்து, அந்தக் கடுஞ்சினத்தைத் தணிவித்து விடுகிறது. அத்தனை அழிம்புகள்! அதிமட்டங்கள்! கேட்பார் கேள்விக்கு யாருமே இல்லை என்னும் அகங்காரம்! மதர்ப்பு! உன்மத்தம்!

இந்த நிலையில் இப்பொழுது இன்னொரு கொடுமையான செய்தி வந்திருக்கிறது.

படைத்துறையில் உள்ள வீரர்களிடம் மதக்கருத்துகளைப் பரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மதம் என்று பொதுவாகச் சொன்னாலும் - வேறு மதங்களுக்கும் அங்கு இடமுண்டு என்று அறிவித்தாலும் - அவர்களின் முழுநோக்கமும் இந்துமதத்தைப் பற்றியதுதான் என்பதில் ஐயமில்லை....)

படைத் துறையில் இஃது ஒரு புதிய ஏற்பாடு, புதிய பதவி. அதன் பெயர் இளநிலை ஆணைய அதிகாரி - மத ஆசிரியர் (Junior Commissioned Officer — Religions Teachers) என்பது.

இவர்களும் படைத்துறை அதிகாரிகள் என்னும் மதிப்பைப் பெறுவார்கள்.

அவர்களின் பணிகள் படைத்துறை வீரர்களிடம் மத உணர்வுகளைப் புகட்டுவது; மதக் கோட்பாடுகளைக் கற்பிப்பது, மதப் பழக்க வழக்கங்களைப் புகுத்துவது.

இவர்கள் மதம் பரப்புநர்கள், மத ஆசிரியர்கள். இவர்கள் மதக் கருத்துகளைப் படையினர்க்கு அறிவுறுத்த வேண்டும்; மத வழிபாடுகளை அவர்களுக்குச் சொல்லித் தருதல் வேண்டும்; வழிபாட்டுக் கூடங்களில் சமயச் சடங்குகளை நிகழ்த்த வேண்டும்; படையில் - போர்க்களத்தில் - இறந்தோர்க்கு இறுதிச் சடங்குகளை நிகழ்த்த வேண்டும். அங்குள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் நலங்களுக்கென - நோய்கள் நீங்குவதற்கென வேண்டுகை வழிபாடு செய்யவேண்டும்; சிறையிலுள்ள வீரர்களைச் சந்தித்து அவர்களுக்கும் படையினர் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும், படைத்துறையில் சேர்த்துக் கொள்ளப்பெற்ற சிறுவர்களுக்கும் சிறப்பு மதக்கருத்துகளைப் பயிற்றுவிக்க வேண்டும்; அத்துடன் இவர்கள் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கு மதக் கருத்துகளையும் சடங்கு, பழக்க வழக்கங் (சம்பிரதாயங்)களையும் பயிற்று வித்து, அவர்களுடைய நல்வாழ்விற்காகத் தொண்டாற்றுதல் வேண்டும் என்பனவாக அவர்களுக்குப் பணிநிலைகள் வகுக்கப் பெற்றிருக்கின்றன.