பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


எழுதித் தள்ளிக் கொண்டிருக்கலாமே! வரலாறு என்பதை எப்படி எழுதுதல் வேண்டும் என்பதை மொழி மூதறிஞர் பாவாணரின் ஒப்பியன் மொழி நூல், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம் முதலிய நூல்களைப் பார்த்தேனும் மு.வ. உணர்ந்து கொள்ளுதல், அவர்க்கும் நல்லது அவர் எதிர்காலத்துக்கும் நல்லது என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். ஆரியத்தைத் தழுவிக் கொள்வதும் அதன் அடிப்படுப்பதும், இத்தகைய வரலாற்று நூல்கள் சாகித்திய அகாடமி வழியாக வருவதற்கும், வீடுகளும், தெருக்களும் மலைத் தோட்டங்களுமாகவே வாங்கித் தள்ளுவதற்கும் ஒருவேளை பயன்படலாம். அல்லது மு.வ.வின் வையாபுரித்தனத்தை எதிர்காலத் தமிழ் மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகவும் பயன்படலாம். ஆனால், இத் தொடை நடுங்கித்தனமெல்லாம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் இன்னும் எவ்வளவோ நடை போட வேண்டிய தமிழ்க் குமுகாய அடிமை நீக்கத்திற்கும் துளியும் பயன்படாது.

மேலும், தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கருத்துகள் இவர் மனக் கசண்டை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளன. இவர் போலும் வெறும் கதைகள் கட்டுரைகளாகவன்றி, தமிழையே கட்டிக் காத்துத் தமிழ்ப் பேரினத்தின் தாழ்ந்த நிலையை நிமிர்த்துகின்ற தனிச்செந்தமிழ் ஆராய்ச்சி நூல்களாகப் பலவற்றை இந்நூற்றாண்டில் எழுதிக்காட்டிய மொழிநூல், மூதறிஞர், தனித்தமிழ் ஞாயிறு பாவாணரைப் பற்றி இப்பகுதியிலோ, நூலிலோ ஓரிடத்திலும் பெயரளவிலும் இந்நூலில் குறிக்கப்பெறவில்லை. நேற்றுப் பிறந்த மொட்டைப் பயல்களையெல்லாம் இலக்கிய ஆசிரியர்களாகக் காட்டியிருக்கும் இவர், இவருக்கு 1959இலிருந்தே தொடர்ந்து பல்லாண்டுகள் தென்மொழி இலவயமாக அனுப்பப்பெற்றிருந்தும் அதன் செம்மாப்பான இலக்கிய வெளியீடுகளையும், மொழித் தொண்டையும், இனப்போராட்ட எழுத்தாண்மையையும் இவர் தெளிவாக அறிந்திருந்தும், அவற்றைப் பற்றி ஒரு சொல் தானும் இவர் பரந்த (!) உள்ளம் இசைந்து எழுதிவிடவில்லை.

மறைமலையடிகளைப் பற்றி ஒரு பக்கமும், திரு.வி.க.வைப் பற்றி இருபக்கங்களும், பாரதிதாசனைப் பற்றி ஐந்தரைப் பக்கங்களும், பாரதியாரைப் பற்றிப் பதிமூன்றரைப் பக்கங்களும் தன் மனம் போனவாறு, விருப்புக்கும், வெறுப்புக்கும் ஆட்பட்டு, சொல்மிடையல் செய்துள்ளார், பர். மு.வ. அவர்கள்.