பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

47


தமிழ் மொழிக்கு மிகவுழைத்தவரெனச் சொல்லப்பெறும் பர். உ.வே. சாமிநாதர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற் பதிப்புகளுக்காக அவர் ஊரூராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெருமையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந் நூல்ளிலெல்லாம் ஆரிய நச்சுக் கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவர்க்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றந்தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக்கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக் கொண்டார். இன்றியமையாத சொற்களையெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸ்-சர் ஸ்மஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷத்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றுரட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதைத் துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களைப் பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களைப் பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணையின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாகவிருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் ‘வடசொல்லாட்சி’ என்னும் தலைப்பிட்டு, அப் புறநானூற்று