பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அடிவருடிகள் போக மற்றவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகின்றோம். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதுபோல் இந்தி பேசும் வடநாட்டினரால் பிற மொழியாளர் மேல் வலிந்து திணிக்கப்படும் இந்திமொழியின் காரணமாக, இந்தியைத் தேசிய மொழியாக ஒப்புக் கொண்டவர்களும், ஒப்புக் கொள்ளாதவர்களுமாக இரு கொள்கையை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் இக்கால், இறந்துபட்டதாக அல்லது பேசத் தகுதியற்றதாகக் கருதப்படும் ஆரிய மொழியான சமற்கிருத மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அரசினர்தம் வ்ரிப் பணத்தைப் பயன்படுத்துவது, பார்ப்பனர்தம் அரசியல் விரகாண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பார்ப்பனர்களின் காவலர்களான திரு. சி.பி. இராமசாமி, திரு. இராசாசி, குடியரசுத் தலைவராக வல்லதிகாரம் பெற்றுள்ள திரு. இராதாகிருட்டினண் ஆகியவர்களின் உள்நோக்கமெல்லாம் பார்ப்பனர்தம் ஆட்சியே ஓங்கவேண்டுமென்பதும், வடமொழி மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்பதுமே ஆகும். இவ் உள்நோக்கங் கருதியே திரு. இராசாசி அவர்களும் இந்தி மொழியை எதிர்க்கின்றார். இந்தி மொழியைத் தென்னாட்டவர்கள் ஒரு நாளு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதும், இக் காரணங்காட்டிச் சமற்கிருத மொழியைத் தேசிய மொழியாக்க வடவரிடம் எடுத்துக் கூறி ஒப்புக் கொள்ளச் செய்வதும் இராசாசி போன்றவர்களின் மொழித் திட்டமாகும். இந்தியைத் தமிழ்நாடு ஒருபொழுதும் ஏற்காது’ என்று தம் கட்சியின் மொழித் திட்டத்துக்குப் புறம்பாகக் கூறிவருவதும் இக்காரணம் பற்றியே! “வட மொழியே தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்ற மொழி” என்று திரு. சி.பி. இராமசாமி அவர்கள் கூறி வருவதும் இதுபற்றியே! இன்னமும் தெளிவாகக் கூறுவதானால், திரு. காமராசர் போன்ற தமிழுணர்வு கொஞ்சமேனும் உள்ளவர்கள், இந்தியைக் கொண்டுவரும் நோக்கமும் அதுதான். “இந்தியை இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்கத் தவறினால், பிற்காலத்தில் பார்ப்பனர்தம் வலிவாலும் சூழ்ச்சியாலும் சமற்கிருதமே தேசிய மொழியாக ஆகிவிடக்கூடும்” என்பதே காமராசரின் அச்சமாகும். மற்றபடி இந்தியினால் ஏற்படப் போவதாகப் பேசப்பட்டு வருகின்ற தேசிய ஒருமைப்பாடுபற்றிக் காமராசரைவிட இராசாசியே மிக நன்றாக அறிவார். பெரியார் திரு. இராமசாமி அவர்கள் காமராசரின் கொள்கைகளுக்குத் துணைநிற்கும் காரணமும் இதுவே! ஆனால் தன்னம்பிக்கையற்ற இத்தகைய அச்சங்களுக்கெல்லாம் நாம் மதிப்பளிக்கப் போவதில்லை. இவ் வச்சங்கட்கு அடிப்படைக்