பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்ப்பனரின் எழுச்சி!

பொதுவாகப் பார்ப்பனர் என்று குறிக்கப் பெறும் ‘பிராமணர்கள், நிலத்தேவர்கள் என்றே மறை(வேதங்)களிலும், நூன்முறை(சாத்திரங்)களிலும், பழநூல்(புராணங்)களிலும், பழங்கதை இதிகாசங்களிலும், அறிவு நூல்(ஆகமங்)களிலும், அறநூல்(மிருதி) களிலும், வேள்வி முறை(பிராமணங்)களிலும், மறையறிவு(உபநிடதங்) களிலும், சமயச்சடங்கு(ஆரண்யகங்)களிலும், மெய்ந்நூல்(தத்துவங்)களிலும், வினைநூல்(கரும காண்டங்)களிலும், வழிபாட்டு நூல் (பூஜா நியமங்)களிலும், ஓக(யோக) நூல்களிலும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் அடிப்படை உண்மைபோலும் கூறப்பட்டிருக்கின்றது. அவ்வடிப்படையிலேயே மக்களின் அமைப்புகளும் ஒருசார்புடையன வாகவே பகுக்கப் பெற்றுள்ளன.

இந்நூல்களில் கூறப்பெற்ற உண்மைகளின்படி தூய்மையே (சத்துவம்) நிரம்பியவர்கள் பிராமணர்கள் என்றும், ஆண்மை (ரஜஸ்) நிரம்பியவர்கள் ‘க்ஷத்திரியர்கள்’ என்றும், சோர்வு(தமஸ்) நிரம்பியவர்கள் ‘வைசியர்கள்’ என்றும் இம்மூன்று தன்மைகளில் எதுவுமே சரிவர அமையாதவர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் கூறப் பெற்று வருகின்றன. இந்நால்வரும் உலகில் அறிவுபுரத்தல், உலகு புரத்தல், பொருள்செயல், தொண்டுசெயல் என்ற காரணங்களுக்காவே பிரம்மா என்னும் படைப்புக் கடவுளின் முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்று தோன்றியவராகக் கூறப் பெற்றுள்ளனர். இந்நால்வகை மக்களுக்கும் கூறப்பெற்ற வாழ்முறைகளும், அறமுறைகளும், ஒழுக்க முறைகளும் மனு முதலிய