பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

71


நகைகளையே இக் குலத்துப் பெண்டிர்கள் அணிந்துகொள்ளவேண்டுமென்றும், இவர்கள் மார்புக்கு எவ்வகையான துணிகளையும் அணியக் கூடாதென்றும், எப்பொழுதும் கடினமான தொழில்களைச் செய்தே பிழைக்க வேண்டுமென்றும், இவர்கள் நாய், கழுதைகள் தவிர மாடு முதலியவற்றை வளர்க்கக் கூடாதென்றும், இவர்களைப் பிறர் தீண்டவே கூடாதென்றும், இவர்களுக்கு வேலைக்காரர்களைக் கொண்டே சோறிட வேண்டுமென்றும், இதுவே பிரமன் கட்டளை யென்றும், சூத்திரன் சுண்ணாம்பு வீடே கட்டக் கூடாதென்றும், வீட்டிற்குக் கதவே வைக்கக்கூடாதென்றும், படித்த சூத்திரனும் மதம் பிடித்த யானையும் ஒன்று என்றும், அதனால் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கவே கூடாதென்றும், பிராமணன் எந்தக் காலத்திலும் உழவு செய்யக்கூடாதென்றும், உழவுத் தொழில் உலகில் உள்ள தொழில்களெல்லாவற்றிலும் மிகத் தாழ்ந்த தொழில் என்றும், அதைச் சூத்திரர்களைக் கொண்டே செய்விக்க வேண்டுமென்றும் இன்னும் பலவாறாகவும் பார்ப்பனர்களுக்கு நன்மையாகவும் பிறருக்குத் தீமையாகவும் மிக விழிப்பாகவும் கரவாகவும் மனுநூலில் எழுதப் பெற்றுள்ளன.

இவற்றை எதற்காக இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறினோம் என்றால் அக்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும் இந்த அடிப்படையான கொடுமைகளையே உலக நெறிமுறையாகக் கொண்டு பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை விளக்கிக் காட்டவே! இத்தகைய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகும் அரசர்களையே அவர்கள் வாழ்த்தினர் என்பதற்கும், அவ்வாறு அல்லாதவர்களை அவர்கள் சூழ்ச்சியாலும், விரகாலும் தாழ்த்தினர் என்பதற்கும் தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ஏராளமான சான்றுகள் உள. தப்பித்தவறி அவர்களின் விரகுக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்படாமல் தமிழறம் புரந்த தமிழரசர்களின் வரலாற்றை மாற்றியெழுதி அவ் வரலாறுகளையும் தங்களுக்குத் துணையாக்கிக் கொண்டனர். ‘மனுநீதி கொன்ற சோழன்’ என்னும் பெயராக மாற்றி, அவர்களின் அடிப்படையான எண்ணங்களில் பிறர் ஐயுறா வண்ணம் திறமையாக நடந்துகொண்டனர். தாங்களே நிலத்தேவர்கள் என்றும், தங்களிடமே இவ்வுலக ஆட்சியைப் ‘பிரமன்’ ஒப்படைத்தான் என்றும் எழுதிவைத்துக் கொண்டு செயல்படும் இவர்களின் கரவும், எத்தும், புரட்டும் இன்றுகாறும் தொடர்ந்தே வருகின்றன.

தமிழரை மொழியாலும், செயலாலும், அரசாலும், கல்வியாலும் அடிமைப்படுத்தி, உலகாண்மை முழுவதும் தங்கட்கே