பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


மொழியைப் பொறுத்த அளவில் அவர்களின் கூத்து எப்படித் தமிழன்னையின் முகத்தில் கரிபூசும் வேலை என்பதை இன்றைய அரசியல் 'தமிழர்' கண்ணுான்றிப் பார்ப்பார்களாக மொழிநலம் காப்பதாக வாய்ப்பறை சாற்றிக் கொண்டுள்ள காவலர்களும் நாவலர்களும் கலைஞர்களும் வேள்களும் இவற்றைக் கண்ணுற்ற பின்னும் தம் அரசியல் ஊடாட்டங்களுக்கு ஆரிய மாயைகளைப் பயன்படுத்துவார்களானால், அவர்தம் முயற்சி முற்றும் அரிமாவைக் குறிவைத்து அதன் நிழல்மேல் அம்புவிட்ட பேதையின் வேலையாகவே முடியும்

நெய்வேலியில் வாரும் நிலக்கரியைக் காட்டி ஆரியவேலி கட்டிக் கொண்டிருக்கும் அங்குள்ள பார்ப்பனர்கள் அங்கு ‘வைதீக சமாஜம்’ என்றும் ‘கோகுலம்’ என்றும், ‘தபோவனம்’ ‘மணித்வீபம்’ என்றும் பல அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்க்கும் தமிழர்க்கும் நாளொரு கேடும் பொழுதொரு சூழ்ச்சியும் செய்த வண்ணமாகவே உள்ளனர் என்று அங்குள்ள தமிழர் பலர் மனம் புழுங்கி நமக்கு மடல்கள் எழுதியவாறே உள்ளனர். அண்மையில் வந்த மடல் அங்குள்ள தெருக்களின் பெயர்களைப் பற்றிய ஒரு விளக்கமாக அமைந்திருக்கின்றது. அம்மடலில் உள்ள ஒரு பகுதியை அப்படியே குறிக்கின்றோம். “....... மேற்கண்ட கூட்டத்தினரே(பார்ப்பனரே) அங்குள்ள வேலைகளில் பெருவாரியாக உள்ளனர். தலைமை அதிகாரிகள் அத்தனைப் பெயரும் அவர்களே. அவர்கள் ‘சத்சங்கங்கள்’ கூடி அங்குள்ள தெருக்களுக்குப் புதுமைப்(!) பெயர்களைச் சூட்டியுள்ளனர். அவற்றில் சில வருமாறு: உளுந்து தெரு, துவரைத் தெரு, பாதாம்கொட்டைத் தெரு, பருத்திக் கொட்டைத் தெரு, பிண்ணாக்குத் தெரு, பேனா தெரு, பென்சில் தெரு, பாய் தெரு, தலையணை தெரு, கருங்கல் தெரு, கத்தரிக்காய்த் தெரு, விசிறி சாலை, வளையல் தெரு..... இன்ன பிற. இப் பெயர்களை வேண்டுமென்றே அவர்கள் வைத்துள்ளனர். காரணம் நல்ல அழகிய தமிழ்ச் சொற்களாக வைத்தால் தமிழ்ப்பற்று வளர்ந்துவிடக்கூடும் என்பதும், தாங்கள் தங்கள் உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் பல வேலைகளும் வேலை உயர்வுகளும் வழங்கி வருகின்ற முறை கேடான செயல்களில் தமிழர்க்கு எண்ணம் எழாமல் தடுக்க வேண்டும் என்பதுமே! இவற்றை முன்கூட்டியே கருதித் திட்டமிட்டு வைக்கப்பட்ட பெயர்களாகும் இவை. காந்தியடிகள், நேரு, திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகள் ஆகியவர்கள் பெயர்களையோ, அல்லது தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் புலவர் பெருமக்கள், மன்னர்கள், அமைச்சர்கள், மறவர்கள், வள்ளல்கள் ஆகியோர் பெயர்களையோ வைக்காத காரணம் அறவுணர்வும், தமிழ் உணர்வும் அரசியல் விழிப்பும், நேர்மையும் பற்றி மக்கள் எண்ணிப் பார்க்கவே கூடாதென்ற எண்ணந்தான்”.