பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

95


கொம்புகளையும் காப்பாற்றிவிட முடியாது. வடவர்கள் இந்தியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டே தமிழை வாழவைக்க முடியாது. பார்ப்பனர்கள் தங்கள் மேனிகளில் சுற்றிக்கொண்டுள்ள பூலுரலைக் கழற்றி நீர்ச்சிலை கட்டும் இடுப்புநூலாகப் பயன்படுத்தும்வரை, தங்கள் குடுமிகளைக் கத்தரித்துக் குப்பையில் போடும்வரை, அவற்றிற்கொரு புனிதமும் ‘புராணமும்’ கூறி மக்களை மடயர்களாக ஆக்குவதை நிறுத்தும்வரை, ஆதித்தன் போன்ற தமிழ்ப் பண்பாட்டுக் கேடர்களின் தினத்தந்தி, இராணி போன்ற தாள்கள் ஒழிக்கப்படும்வரை இந்தியாவில் தேசியமும் வளராது; தமிழர்களும் முன்னேறிவிட முடியாது. கடல் வற்றுவது எப்பொழுது கருவாடு தின்பது எப்பொழுது?

எனவே தமிழர்களுக்குள்ள ஒரேவழி தமிழகத்தைத் தனியாகப் பிரித்துக்கொண்டு தாமே ஆண்டுகொள்வதுதான். தமிழன் என்றைக்கும் அடிமையாகவே இருக்க விரும்பவில்லை. அவன் தன்னைத் தானாகவே ஆண்டுகொள்ள எண்ணங் கொண்டு விட்டான். தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எழுந்துவிட்டனர். தமிழக மறுமலர்ச்சி ஏற்பட்டே தீரும் என்று சூளுரைத்துவிட்டனர். பெரியார் ஈ.வே. இரா அவர்களும் தமிழக விடுதலைக்குச் சங்குமுழக்கம் காட்டிவிட்டார். அவர் கூட்டும் படைக்கு ஆயிரம் ஆயிரம் தமிழுணர்வுள்ள இளைஞர்களும், மாணவர்களும் தேவை. அவர்களுள் ‘தென்மொழிப் படை’ முனைமுகத்து நிற்கத் துடிக்கின்றது. முதற்பலியாகவும் தன்னை அணியப்படுத்திக் கொண்டது. இந்த உறுதியைத் தமிழக விடுதலை நோக்கிப் படை நடித்தும் பெரியாருக்கு முதல்படையலாகத் தருகின்றது. “தமிழர் படை வெல்க! தமிழ்த்தாய் அரியணையேறுக” எனக் குரலுயர்த்தித் தமிழரை அழைக்கின்றது. தென்மொழி! எல்லாரும் வம்மின் !

-தென்மொழி சுவடி : 6, ஓலை : 2, 1968