பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழர் பண்பாடு


திங்களும், ஏன், மண்ணும் விண்மீன்களும் புகுந்து ஒளிகாட்ட மாட்டாப் பேருலகிற்குச் சென்றவர்க்கு மட்டுமே. மேலான அழியாப் பெருநிலை தரவல்லதுமான, படிப்படியாக வளர்ந்து நிற்கும், கட்புலனாகக் கருத்துக்களுக்கு உரியராயினர். காணும் இந்நில உலகைப் பொறுத்த வரையில், தமிழரின் மனப்போக்கு, எதிலும் நலமே காணும் நம்பிக்கை உடையதாக, ஆரியரின் மனப்போக்கு, எதிலும், துன்பமே காணும் நம்பிக்கை அற்றதாக அமைந்துவிட்டது. அன்றைய தமிழர்கள், கடுமையான சாதிப்பிரிவுகளால் பிரிக்கப்படவில்லை. ஆனால், ஆரியர்கள் நான்கு வருணத் தலைவர்களாகப் பிரிவுற்றிருந்தனர். பழைய தமிழ்ப் பாக்களின் மரபு சமஸ்கிருதப் பாக்களின் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. ஆகவே, பெரும்பாலான தமிழர்களும், தென்னாட்டு ஆரியர்களும், மற்றவர் பண்பாட்டு நாகரீக நிலையைப் பாதிக்காத வகையில், அவரவர்க்குரிய தனி வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரலாயினர். பழந்தமிழ்ப் பாடல்களில் பெரும் பகுதி அழிந்துவிட்டன என்றாலும், கிறித்துவ ஆண்டுக்குப் பிறகும், சில ஆண்டுகாலம், சமஸ்கிருத நாகரீகம், தமிழ்ப்புலவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டுவிடவில்லை என்பதை உறுதி செய்வதற்குப் போதிய பாக்கள் இன்னமும் உள்ளன.

தொகை நூல்கள்

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளிலும், பழந்தமிழ்ப்பாக்களில், மறந்து போகாம்ல நினைவில் நின்ற எல்லாப் பாக்களும், பல்வேறு தொகை நூற்களில் ஒன்று தொகுக்கப்பட்டன. நேரிடையாக அல்லது ஒருவகையில் போரோடு தொடர்புடைய நானூறு எண்ணினைக் கொண்ட, வெவ்வேறு அளவுடைய பாக்கள், புறநானூறு என்ற தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பட்டன. அன்பின் ஐந்திணை ஒழுக்கத்தோடு தொடர்புடைய அகப்பாடல்கள், ஒவ்வொரு தொகையிலும் இடம் பெறும் பாக்களின் அடிகள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மூன்று தொகை நூல்களில் தொகுக்கப்பட்டன.