பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழர் பண்பாடு


பரிபாடல் என்ற பாவகையில், வைகை, திருமால், முருகன் என்ற தலைப்புகளில் பாடப்பெற்ற பாக்களின் தொகுப்பு, பரிபாடல், பதிற்றுப்பத்து, சேர அரசர்களின் புகழ்பாட இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு ஆகும். இத்தொகை நூல்களில், அவ்வப்போது நிகழ்கிற சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட பாடல்களே இடம் பெற்றிருக்க, முந்தைய நான்கு தொகை நூல்களில், குறிப்பிட்ட ஒரு கொள்கையை விளக்க ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பதால் பிந்திய தொகை நூல்கள் நான்கும், முந்திய தொகை நூல்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன. இலக்கியத் திறனாய்வு குறித்துத் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் வகுத்த நெறிகளில் பாக்கள் புனையப்பட வேண்டும் என்ற எண்ணம், பிற்காலத்தில் வழக்கில் வந்தது. மேலும், பிற்கூறிய தொகை நூலை உருவாக்கிய பாக்கள், சிவன், விஷ்ணு குறித்த ஆரியக்கோட்பாடுகளும், ஆகம நெறி போதிக்கும் வழிபாட்டு முறைகளும், தமிழ்நாட்டில் கால் கொண்டு விட்ட காலத்தை, வேறு வகையில் கூறுவதானால், சிந்தனையிலும், வழிபாட்டு முறையிலும், தமிழர்கள், ஆரிய மயமாகிவிட்ட காலத்தைச் சேர்ந்தனவாம். இப்பாக்கள் தமிழ்ச் செய்யுள் மரபுகளை, இன்னமும் கொண்டுள்ளன என்றாலும், அவை கூறும் சமயக் கருத்துக்கள், ஆகமகருத்துக்களுக்கேற்ப மாறுதல் பெற்று விட்டன. ஆகவே, முந்தைய தொகை நூல்களை உருவாக்கிய பாக்களில் சில, பிந்திய தொகை நூல்களைச் சேர்ந்த இப்பாக்களும் பழம்பாடல்களே என எண்ணப்பட்ட பிற்காலத்தே, இத்தொகை நூல்களும், எட்டுத்தொகை நூல்கள் என்ற பொதுப் பெயரைப் பெற்றுவிட்டன.

பத்துப்பாட்டு :

பத்து நெடும் பாக்களைக் கொண்ட, பத்துப்பாட்டு எனும் பெயருடைய மற்றொரு தொகை நூலும் உளது. பத்துப் பாட்டு 103 அடிகள் முதல் 782 அடிகள் வரையுள்ள நீண்ட பாக்களைக் கொண்டது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும், கரிகாலனின் தொடக்க நிலை வாழ்க்கையைப்