பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்

137


பாடுவதுமாகிய பொருநராற்றுப்படை கி.பி. 400க்குச் சிறிது முற்பட்ட காலத்தில் பாடப்பட்டது. காலத்தால் முற்பட்ட பாட்டிலிருந்து பிற்பட்ட பாட்டு வரையான இப்பத்துப் பாட்டுப்பாக்களில், சமஸ்கிருதச் சொற்களின் படிப்படியான பெருக்கமும், நாட்டின் பெருகும் ஆரியத்தன்மையும், மிகத் தெளிவாகச் சுட்டிக்காணக் கூடியனவாம் ; மேலும், அப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளோடு, அப்பாட்டு ஒவ்வொன்றும் பாடப்பட்ட காலத்தை உணரும் துணைச்சான்றாகவும், அவை கொள்ளத்தக்கனவாம். பத்துப்பாட்டு, முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அந்த நான்கு தொகை நூல்களோடு, பாக்களின் யாப்பு முறையிலும், இலக்கிய மரபுகளிலும் பெரிய அளவில் வேறுபடுவன அல்ல. ஒவ்வொன்றும் கொண்டிருக்கும் நீளத்தால் மட்டுமே வேறுபடுகின்றன. கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான காலத்தில், தமிழர்கள் நடத்திய வாழ்க்கை பற்றிய முழு ஓவியத்தை வரைதற்கு அவை, இன்றியமையா மதிப்புடையவாம்.

பதினெண் கீழ்க்கணக்குப் பாக்கள் :

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ற மூன்றாவது வகை நூல்கள் உள்ளன. அவை, பொதுவாக ஒவ்வொன்றும் இரண்டு முதல் நான்குவரை அல்லது ஐந்து வரையான அடிகளைக் கொண்ட பாக்களைப் பெற்றுள்ளன என்பது இப்பாக்களின் சிறப்பு இயல்பாகும். இப்பதினெட்டு நூல்களில், சில நூல்கள் அகப்புறப்பாடல்கள் எவ்வாறு பாடப்பட வேண்டும் என்ற இலக்கண விதிகளை விளக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஆவதற்காகவே பாடப்பட்டுள்ளன. அவை, பழைய மரபுகளைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம். ஏனையவை, சிறப்பாக, அவற்றில் தலையாய தாம் திருக்குறள், பழந்தமிழ் இலக்கியங்களில் அறவே இடம் பெறாத, ஒழுக்க நெறி உணர்த்தும் ஒருவகைப்பாக்களை அறிமுகம் செய்கின்றன. ஆன்மீக நோக்கிலிருந்து சிறந்த ஒழுக்க நிலையைக் கற்பிக்கின்றன, கலையுணர் நோக்கிலிருந்து, அணிநலம் வாய்க்கப்பட்ட, கவர்ச்சி அற்ற