பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

149


காலக்கழிவின் நீட்சி, காதல் உணர்வை, இயல்புக்கு மாறான வகையில் வெளியிடுவதாம் முறையை வளர்த்துவிட்டது. அதுவே, காதற்பாட்டின் - அகத்துறைப் பாட்டின் - ஒரு பொருளாகவும் ஆகிவிட்டது. காதலில் தோல்வியுற்ற ஒருவன் - மேற்கொள்ளும் நனிமிகக் கொடுமை வாய்ந்த முறை, பனை மடல்களால் ஆன குதிரை மீது அமர்ந்து கொள்ளும் மடலேறுதல் என்பதாம். இதை விளக்க, பிற்காலப் பாடல்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்படும். காமநோய் தணித்தற்கு இயலாதவாறு முதிர்ந்துவிட்டால், ஊர்ந்து செல்லும் குதிரை என்று பனைமடலால் ஆன குதிரை மீதும் ஏறிக்கொள்வர்; மாலை என்று சூடத்தகாத, குவிந்த அரும்புகளை உடைய எருக்கமலர்களால் ஆன மாலையையும் சூடிக்கொள்வர். தெருவில், பலர் பழிக்க வலம் வருதலும் செய்வர். அந் நிலையிலும் தம் காதல் நிறைவேறாதாயின் உயிர் விடுவதும் செய்வர்".

மா என, மடலும் ஊர்ப, பூ எனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்க வும் படுவ
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே."
                            குறுந்தொகை : 17.

நெஞ்சே! அழகு மிகுந்து விளங்கும், அசைந்து அசைந்து செல்லும் நடையுடையவளாகிய நம் காதலி, நம்மீது இரக்கம் கொண்டிலள் இனி நாம் விடும் தூதாக, மிக உயர்ந்த பனை மரத்தில் விளைந்து முதிர்ந்த பெரிய மடல்களால் பண்ணிய குதிரைக்கு, மணிகளைப் பூட்டி, பெரிய மலர் மாலையையும் முறைப்படி சூட்டி, நாம் வெள்ளெலும்புகளை மாலையாக மார்பில் அணிந்து கொண்டு, பார்ப்பவரெல்லாம் இகழுமாறு அம்மடல் மாமேல் அமர்ந்து, ஒருநாள், நம் உயிரோடு பிறந்த நாணத்தையும் கைவிட்டு, அவள் உறையும் ஊர்த்தெருவில் திரிவதுதானோ?

விழுத்தலைப் பெண்ணே விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபில், பூட்டி,
வெள்ளென்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி,