பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழர் பண்பாடு


அடுப்பு உணர்த்தப்பட்டுளது. “உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பு” (அகம் : 119 : 8). அப்பாக்கள் கூறும் விளக்கத் திலிருந்து, பண்டங்கள் வண்டி வண்டியாக, ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு போகப்பட்டன என்பது தெரிகிறது. கடலைச் சார்ந்த நிலத்தில், கழிநீரால் விளைந்த உப்பை ஏற்றிக் கொண்டு, மலைநாட்டை நோக்கிச் செல்லும் வண்டியின், ஆரக்கால்களையுடைய சக்கரம் பள்ளத்தில் பாய்ந்துவிடும்போது, தன் உரங்கொண்டு அத்தளர்ச்சி தீர்த்து ஈர்த்துச் செல்லும், பெரும்பாரம் தாங்கவல்ல மிக்க வலியுடைய காளைக்கு ஓர் அரசன் ஒப்புக் கூறப்பட்டுள்ளான்.

"கானல் கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்”
                          - புறம் : 60 : 6-9

இடைவழியில் முரிவுற்றுப் போயின், ஆங்கு உதவுவதற்காகத் தனியாக ஓர் அச்சு உடன் கொண்டு செல்லுமளவு வண்டிகளில் பெரும்பாரம் ஏற்றப்படும்; அவ்வாறு தனியே எடுத்துச் செல்லும் அச்சு ‘'சேம் அச்சு” எனப்படும். எருதுகள் இளையன: நுகத்தடியில் இதற்கு முன் பூட்டி அறியாதன. வண்டியிலோ பண்டப் பொதிகள் மிகப் பெருமளவில் ஏற்றப்பட்டுள்ளன. மேடு நோக்கி ஏறும் போதோ, பள்ளம் நோக்கிப் பாயும் போதோ ஏதேனும் ஆகக் கூடும் அதை முன்கூட்டி அறிதல் இயலாது. எதற்கும் தனியே ஓர் அச்சு உடன் கொண்டு சேரல் நல்லது என எண்ணும் உமணர், உள்ள அச்சின் கீழே, வேறோர் அச்சைத் தனியே பிரித்துக் கொண்டு செல்வர் என்கிறது புறநானூற்றுப் பாட்டு ஒன்று.

‘எருதே இளைய நுகம்உண ராவே; :
சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே;
அவல் இழியினம், மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார்? என உமணர்
கீழ்மரத்து யாத்த சேம் அச்சு”
                 புறம் : 102 : 1-5