பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

173


உண்மையான நிலையாகும். "குறையாத வண்மையும், பகை அழிக்கும் பேராண்மையும் வாய்ந்த தலைவ, உன் படையைச் சேர்ந்த யானைகள் மலைகள் போல் காட்சி அளிக்கின்றன. நின் நாற்படையின் ஆரவாரப்பேரொலி, கடல் அலைபோல் முழுங்குகிறது : கூரிய முனையை உடைய உன் வேற்படை மின்னல் போல் ஒளி வீசுகிறது. இத்தகு பெரு நிலையால் உலகத்துப் பேரரசர்களெல்லாம் உளம் ஒடுங்குவதற்கு ஏதுவாய பேராற்றலோடு திகழ்கின்றனை : நினக்கோ நின் நாட்டிற்கோ வரக்கூடிய குற்றம் எதுவும், இல்லையாயிற்று; இந்நிலை, உன் குடிக்கு வழிவழியாக வரும் பெருமையாகும். அதனால், உலகத்து ஆறுகள் எல்லாம், மலைகளிலிருந்து வீழ்ந்து விரைந்து கடலை நோக்கி அடைவது போல், புலவர்களும் இரவலர்களும் உன்னை நோக்கி வருவாராயினர்".

"ஆனா ஈகை, அடுபோர் அண்ணல்!
யானையும் மலையின் தோன்றும்; பெரும!
நின் தானையும் கடல் என முழங்கும்; கூர்நுனை,
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசு தலைபணிக்கும் ஆற்றலை; ஆதலின்
புரைதீர்ந்தன்று; புதுவதோ அன்றே;
..........................
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே".
                 (புறம் : 42 : 7-6; 19-21)