பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

203


இயலாததுமாகிய இரு சுழி "ன" ஆகியவற்றைக் குறிக்கும் வரிவடிவங்களைக் கொண்டுள்ளன. ஆகக் கிடைக்கக் கூடிய அகச்சான்றுகளின் படி, கி.மு. மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில், அல்லது, அல்லது, இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், கல்வெட்டு வடிப்பதில், நீடித்துப் பயின்று, அழியாப்பயிற்சி பெற்றுவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால், தமிழ், முதன்முதலில், வரிவடிவில் எழுதப்பட்டது எனத் தெரிகிறது. தமிழிலக்கியங்களை எழுதி வைப்பதற்குத் : தனியான நெடுங்கணக்கு இல்லாமையே கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்திற்கு மிகவும் முற்பட்ட காலத்திலேயே, பெருமளவில் இயற்ப்பட்டிருக்க வேண்டியவாய, தமிழ்ப் பாக்கள், மீளவும் பெறமாட்டாவகையில், அழிந்து விட்டதற்குக் காரணமாம். ஆகவே, தமிழ் எழுத்து முறை, எல்லோராலும், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர், அகத்தியனார் வாழ்ந்திருக்க முடியாது என முடிவு செய்கின்றேன். தொல்காப்பிய ஆராய்ச்சி ஆசிரியரும் அவர் மாணவரும் அதற்கு, ஒரு நூற்றாண்டு அல்லது சற்று அதிகப் படியான பிற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கொள்ளுமாறு நம்மை வற்புறுத்துகிறது. திருமணம், மற்றும் இனிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடைய நாழிகை எனும் பொருளில், ஓரை" என்ற சொல்லைத் தொல்காப்பியர் ஆண்டுள்ளார்.

"மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்,
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை"
             (-தொல் : பொருள் : களவு : 44)

"தீய ஓரையிலும், தீய நாளிலும், புணர்ச்சியைக் கைவிட வேண்டும் என்ற கொள்கை, மறைந்த ஒழுக்கமாம், களவுக் காலத்தில் தலைவனுக்கு இல்லை"

"ஓரை" என்ற அத்தமிழ்ச் சொல், "அவர்" (Hour) என்ற ஆங்கிலச்சொல்லைப் போலவே முடிந்த முடிவாக ஹொரா (Hora) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்தே