பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தமிழர் பண்பாடு


அணுகுவதற்கு அரிய ஆற்றல் வாய்ந்தவனுமாகிய பழம்பெரும் கடவுளுக்கு, அடுத்து இருக்க விரும்புவோனே!'’ எனப் பாராட்டுகிறது.

"தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பின் பொருந!"
                       - மதுரைக்காஞ்சி : 40-42

இப்பகுதி, பொருள், தெளிவு காணமாட்டாது உளது. "தென்னவன்” என்பது இராவணனைக் குறிக்கும் என்றால், இராமனுக்கு அடுத்தவனாக இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்பது பொருளாதல் வேண்டும். ஆனால், இராவணனைத், தென்னவன் எனக் குறிப்பிடும் ஒரே ஒரு குறிப்பு, அதுவும் மிகவும் பிற்பட்ட பாட்டு ஒன்றில் உளது.

"தென்னவன் மலை எடுக்கச், சேயிழை ஒடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற”
                 -திருநாவுக்கரசர் தேவாரம் திருக்கச்சி மேற்றளி.

"தென்னவன்" என்பது, பாண்டிய மன்னர்களுக்குப் பொதுவாக இட்டு வழங்கும் ஒரு பட்டப்பெயர். அப்பாட்டு, ஆரியப் புராணக் கதைகள் தமிழ்நாட்டில் பரவ இடம் கொண்டுவிட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாடப்பட்ட தாயின் அத்தொடரைத் , தென் திசைக் கடவுள் எனக் கூறப்படும் யமனை வென்ற சிவனுக்கு அடுத்த நிலையில் இருக்க விரும்பினான் நெடுஞ்செழியன் என்ற பொருள் தரும் வகையில் கொள்ளலாம். ஆனால், சிவனின், இவ்வெற்றிச் செயல், நெடுஞ்செழியன் காலத்து மதுரையில், பலராலும் அறியப்பட்டிருந்தது என, உறுதியாகக் கொள்ளமுடியாது. மேலே கூறப்பட்ட இரு பொருள்களுமே, கட்டுப்பாடற்ற கற்பனைகள்தாம். ஆனால், உரையாசிரியர் நச்சினார்க் கினியரின் விளக்கம் படுமோசம். அவர், மூலச் சொற்களையும், சொற்றொடர் களையும் தாம் கூற விரும்பும் பொருளுக்கு ஏற்றவாறு இடம் மாற்றிப் போட்டுத், தென்னவன் என்ற சொல் இராவணனைக் குறிப்பதாகக் கொண்டு, அகத்தியர்,