பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

213


உணர்ந்த காதை : 62) எனக் குறிப்பிடப்பட்டுளது. இக்கதை; ஆக்நேய புராணத்தில் கூறப்பட்டிருப்பதாக, திருவாளர். டாக்டர். உ. வே. சுவாமிநாத அய்யர் அவர்கள் கூறுகிறார். (மணி: 9:52. அடிக்குறிப்பு காண்க) மற்றொன்று, அகத்தியர் ஆணையிட, வானிடைத் தொங்கிக் கொண்டிருந்த அசுரர்க்குரிய கோட்டையை அழித்து, அவ் வெற்றி குறித்துத் தோளில் தொடி அணிந்து, தொடித்தோள் செம்பியன் எனும் பெயர் கொண்ட சோழ மன்னன் ஒருவன், தன் தலைநகரில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இந்திரவிழாவின் போது வந்திருக்குமாறு, இந்திரனை வேண்டிக்கொள்ள, அவனும் அதற்கு இசைந்து வந்திருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

"ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்,
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என் தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளினும் நன்கு இனிது உறைகு என,
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது.
                  - மணிமேகலை : விழாவறை காதை :3-9

இதன் பொருள் : ஓங்கி உயர்ந்த மலைக்கு உரிய, அரிய தவம் புரிந்த முனிவன் ஆணையிட, வானில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டையை அழித்தல், தொடி அணிந்த தோளினை உடைய சோழன், வானவர். தலைவனாம் இந்திரனை வணங்கி, அவன் முன் நின்று "மண்ணுலகில், எனக்கு உரிய சிறந்த தலைநகரில் பெரியவர்கள் விரும்ப விழாக் கொண்டாடும், இருபத்தெட்டு நாட்களிலும் வந்து நன்கு இருப்பாயாக" என வேண்டிக் கொள்ள, தேவர் தலைவனும் அது நேர்ந்தான் என்பதாம்.

கொண்டாட மறந்துவிட்டதால், தலைநகரைக் கடல் கோளாம் பேரழிவுக்கு உள்ளாக்கிவிட்ட இந்திரவிழா வந்த வரலாறு இது. அப்பாட்டின் பிற்பகுதியில், அகத்தியர் குறித்த