பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை

17


குத்தீட்டி, வெட்டுவாள், மண்வெட்டி முதலானவற்றை வடித்துக் கொள்ளத் தெரிந்து கொண்டான். பழங்கற்காலம் என அழைக்கப்படும் மனித நாகரீகத்தின் தொடக்கநிலை, இந்த மண்ணில், இவ்வகையில் உருப்பெற்றது. இக்காலத்தைச் சேர்ந்தனவாகிய பழங்காலக் கலைப்பொருட்கள், கடப்பை, நெல்லூர், வடார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பெருமளவில் பரவிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் சிறப்பாகக் காணப்படுகின்றன.

குறிஞ்சியில் பண்டைமனிதன், தொடக்கத்தில் கனி, கொட்டைக்குள் இருக்கும் பருப்பு, கிழங்கு வகைகளை உண்டே உயிர் வாழ்ந்திருந்தான். பருவநிலை மாறுதல் காரணமாக, இவ்வுணவுப்பொருள் கிடைப்பதில் ஏற்பட்டு விட்ட முரண்பாட்டு நிலை, அவன் உணவு வகையில் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்துக் கொள்ளத் தூண்டிற்று. விலங்குப் பகைவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு மேலாக இவ்வுணவுத் தேவையே, அவனை வேட்டையில் வல்லுநனாக ஆக்கிற்று. ஆகவே, மனிதனின் முதல் தொழில், வேட்டையாடுதலாய் அமைந்தது. பழங்கற்காலக் கருவிகளெல்லாம் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இவ்வுண்மை, தொடக்க காலத்து வேடுவன், உலகின் பல பாகங்களிலும் அலைந்து திரிந்த பெரிய நாடோடியாம் என்பதை உறுதி செய்கிறது.

குறிஞ்சி நிலத்தின் சுற்றுச் சூழ்நிலை, மனித நாகரீகத்தின் வேட்டுவர் வாழ்வில் வில் - அம்பு, தீ மூட்டுதல் என்ற மேலும் இரு அரிய பெரிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணவும். வழிவகுத்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த குறிஞ்சி நிலங்களில் மூங்கில் ஏராளமாக விளைகிறது. குறவர் என அழைக்கப்படும் அந்நிலத்து வாழ் மக்கள், மூங்கிலின் - பிளவுபட்ட கழிக்களின் வளைந்துகொடுக்கும் இயல்பை நுண்ணியதாக அறிந்து, அவற்றை வளைத்து, அவற்றின் இரு முனைகளையும், உலர்ந்து நீண்ட கொடிகள் கொண்டு இறுக்கிப் பிணித்து, அவற்றினின்றும் நீண்ட முட்களை, இருந்த இடத்திலிருந்தே தொலைவிடங்களுக்கு விரைந்து செலுத்த அறிந்து கொண்டனர். தாரியஸ் , ஸெர்ஸஸ் என்ற